
கோலாலாம்பூர், மார்ச்-18-மத்தியக் கிழக்கு போரின் தாக்கத்தால் எதிர்காலத்தில் நீர் விநியோகத்தில் இடையூறு ஏற்படலாம் என, SPAN எனப்படும் தேசிய நீர் சேவை ஆணையம் எச்சரித்துள்ளது.
தற்போது எந்த பெரிய பாதிப்பும் இல்லை என்றாலும், உலகின் முக்கிய வர்த்தகப் பாதையான Hormuz நீரிணையில் நிலவும் பதற்றங்களால், தேசிய நீர் விநியோகத் துறைக்கு ஏற்படக்கூடிய அபாயங்களை SPAN அணுக்கமாக கண்காணித்து வருகிறது.
நீண்டகால அசாதாரண சூழ்நிலை, முக்கிய விநியோகச் சங்கிலிகளை பாதிக்கக்கூடும் என அது எச்சரித்துள்ளது.
நீர் சேவைத் துறையானது, உண்மையில் எரிபொருள் மற்றும் லாஜிஸ்டிக் தொடர்பான அனைத்துலகச் சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டதாகும்.
அதோடு, நீர் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் விநியோக முறைகளில் பயன்படுத்தப்படும் உதிரி பாகங்கள் மற்றும் சுத்திகரிப்புக்கான இரசாயனக் கையிருப்பின் தாக்கத்திற்கும் உட்பட்டதாகும்.
எனவே, , நீர் சேவை நிறுவனங்கள் 3 முதல் 6 மாதங்களுக்கு தேவையான இரசாயனங்கள் மற்றும் உதிரி பாகங்களை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என அது அறிவுறுத்தியது.
அதே நேரத்தில், பொது மக்களும் நீர் மற்றும் மின்சாரத்தை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும்.
குறிப்பாக இந்த நோன்புப் பெருநாள் காலத்தில் சிக்கனமாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் SPAN அறிக்கை வாயிலாக வலியுறுத்தியது.



