கோலாலம்பூர், ஏப்ரல்-3, 1971-ஆம் ஆண்டு மருத்துவச் சட்டத் திருத்தத்தை விரைவுப்படுத்துமாறு, சுகாதார அமைச்சர், அமைச்சரவையைக் கேட்டுக் கொள்ளவிருக்கிறார்.
முடிந்தவரை, வரும் ஜூன் மாதம் கூடும் 15-வது நாடாளுமன்றத்தின் மூன்றாம் தவணைக்கான இரண்டாவது கூட்டத்தொடரிலேயே, அச்சட்டத் திருத்தப் பரிந்துரைகள் தாக்கல் செய்யப்பட வேண்டும் என, டத்தோ ஸ்ரீ Dr Dzulkefly Ahmad கூறினார்.
KKM-மில் மருத்துவ நிபுணர்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறைப் பிரச்னையைத் தீர்க்க அது அவசியம் என்றார் அவர்.
Akta 50 என்று சுருக்கமாக அழைக்கப்படும் அச்சட்டத்தில் Parallel Pathway திட்டத்தை அத்திருத்தம் உட்படுத்தியிருக்கும்.
அத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவுச் செய்த பயிற்சி மருத்துவர்கள், நிபுணர்களாகப் பதிவுச் செய்யப்பட அச்சட்டத் திருத்தம் வகைச் செய்யும் என Dr Dzulkefly சொன்னார்.
அமைச்சரவையின் ஒப்புதல் கிடைக்கும் வரை, நாட்டில் முதுகலைப் படிப்பு வாயிலாக நிபுணத்துவப் பயிற்சிகள் மேம்படுத்தப்படும் என அமைச்சர் உத்தரவாதம் அளித்தார்.
பொது மக்களும் இந்த Parallel Pathway திட்டத்தின் கீழ் பயிற்சிப் பெறுவோரின் சேவையை நம்பியிருப்பதால், சம்பந்தப்பட்ட அனைத்து சாராரின் ஒத்துழைப்புடன் அச்சட்டத் திருத்தம் நிறைவேறும் என்றும் அமைச்சர் நம்பிக்கைத் தெரிவித்தார்.