
குவாலா திரங்கானு, ஆகஸ்ட்-30,Malaysian Cub Prix மோட்டார் சைக்கிள் பந்தய வீரரான Farres Putra Mohd Fadhill, திரங்கானு மோட்டார் பந்தயத் தளத்தில் நடைபெற்ற ஐந்தாவது சுற்று CP150 இறுதிப் போட்டியின் போது ஏற்பட்ட விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
CKJ Racing அணியைச் சேர்ந்த 18 வயதான Farres Putra, போட்டியின் முதல் சுற்றின் போது 3-ஆவது வளைவில் நடந்த விபத்தில் படுகாயமடைந்ததாக மலேசிய மோட்டார் சைக்கிள் சங்கமான MAM தெரிவித்தது.
உடனடியாக முதலுதவி வழங்கப்பட்டு, குவாலா திரங்கானு சுல்தானா நூர் சஹிரா மருத்துவமனைக்கு அவர் கொண்டுச் செல்லப்பட்டார்; அங்கு மருத்துவர்களின் தீவிர முயற்சிக்குப் பிறகும் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
மறைந்த வீரரின் குடும்பத்தினருக்கும், அவரது அணியினருக்கும் மற்றும் மலேசிய மோட்டார் விளையாட்டு சமூகத்திற்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள MAM, இச்சம்பவம் குறித்த விசாரணைகள் உரிய பாதுகாப்பு நெறிமுறைகளின்படி கையாளப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.



