
கோலாலம்பூர், அக்-16- மலேசிய குற்றத்தடுப்பு அறவாரியத்தின் (MCPF) மூன்று உதவித் தலைவர்களில் ஒருவராக முன்னாள் பினாங்கு மாநிலக் காவல்துறைத் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் தெய்வீகன் ஆறுமுகம் நியமிக்கப்பட்டுள்ளார்.
2026 முதல் 2029ஆம் ஆண்டு வரையிலான புதிய தலைமைத்துவக் காலத்திற்காக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
1985ஆம் ஆண்டு மலேசிய அரச காவல் படையில் பணியைத் தொடங்கிய தெய்வீகன், 2019ஆம் ஆண்டு ஓய்வு பெறும் வரை பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். இறுதியாக பினாங்கு மாநிலக் காவல்துறைத் தலைவராகப் பணியாற்றிய அவர், முன்னதாக புக்கிட் அமான் வர்த்தகக் குற்றப் புலனாய்வுப் பிரிவிலும், சிலாங்கூர் மாநிலக் காவல்துறைத் துணைத் தலைவராகவும் சேவையாற்றியுள்ளார்.

அவருடன் டத்தோ ஸ்ரீ கிங் லிம், டத்தோ முகமது புவாட் ஆகியோரும் முக்கியப் பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், டத்தோ ஸ்ரீ புலவேந்திரன், டத்தோ ஜெயமலர் உள்ளிட்ட 15 மேலவை உறுப்பினர்களுக்கும் தனிப்பட்ட பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
கல்வி, மாணவர்கள், போதைப்பொருள் தடுப்பு, குற்றவாளிகள், சிறைச்சாலைகள், அனைத்துலக மனிதக் கடத்தல் மற்றும் பெண்கள், சிறார்கள் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளை உள்ளடக்கிய இப்பொறுப்புகள் 2029ஆம் ஆண்டு வரை அமலில் இருக்கும்.
இதனிடையே, குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் MCPF கூடுதல் கவனம் செலுத்தும் என அதன் தலைவரும் உள்துறை அமைச்சருமான டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
2026ஆம் ஆண்டிற்கான MCPF-இன் முதல் நிர்வாகக் குழுக் கூட்டத்திற்குத் தலைமையேற்ற அவர், புதிய தலைமைத்துவத்தின் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
குற்றத் தடுப்பு விழிப்புணர்வு, கல்வி மற்றும் பரப்புரைத் திட்டங்கள் மூலம் அறவாரியம் தொடர்ந்து முக்கியப் பங்காற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார். எனினும், மாறிவரும் குற்றச் செயல்களின் தன்மையைக் கருத்தில் கொண்டு, அதன் நடவடிக்கைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுடன் மட்டும் நின்றுவிடக்கூடாது என வலியுறுத்தினார்.
பொதுமக்கள் குற்ற அபாயங்களைக் கண்டறிந்து, தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், குற்றச் செயல்களால் பாதிக்கப்படாமல் இருக்கவும் உதவும் வகையில் திட்டங்கள் அமைய வேண்டும் என அவர் தெரிவித்தார்.
புதிய நிர்வாகக் குழுவின் அனுபவமும் நிபுணத்துவமும் MCPF-ஐ மேலும் வலுப்படுத்துவதுடன், சமூகத்துடனான அதன் தொடர்பையும் தேசியப் பாதுகாப்பிற்கான பங்களிப்பையும் மேம்படுத்தும் என சைஃபுடின் நம்பிக்கை தெரிவித்தார்.



