Latestமலேசியா

மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி; இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை

பினாங்கு, ஜூலை-23-Alam Aliran Kualiti நிறுவனம், “Largest Belt Press System Dewatering Plant” என்ற சாதனைக்காக மலேசிய சாதனைப் புத்தகத்தின் அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தைப் பெற்று வரலாற்றுச் சாதனைப் படைத்துள்ளது.

மலேசிய சுற்றுச்சூழல் பொறியியல் துறைக்கும், மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கும் பெருமை சேர்ப்பதுடன், நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான டத்தோ’ பாலன் ஆகாம்பரம் அவர்களின் 30 ஆண்டுகளுக்கும் மேலான அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் தொழில்முனைவுத் தொலைநோக்கு ஆகியவற்றுக்குக் கிடைத்த தேசிய அங்கீகாரமாக அது திகழ்கிறது.

மலேசிய சாதனைப் புத்தகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிறிஸ்டோபர் வோங், நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ’ பாலன் ஆகாம்பரம் அவர்களுக்கு அதற்கான சான்றிதழை வழங்கினார்.

அந்நிகழ்வை பினாங்கு மாநில முதலமைச்சர் Chow Kon Yeow அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ’ ஸ்ரீ சுந்தரராஜூ சோமு, Pengurusan Aset Air Berhad (PAAB) தலைவர் Dato’ Seri Ir. Jaseni Maidinsa, தேசிய வர்த்தக மற்றும் தொழில்துறை சபை (NCCIM) தலைமையதிகாரி டத்தோ’ ஸ்ரீ என். கோபாலகிருஷ்ணன், அரசு உயர் அதிகாரிகள், தொழில்துறைப் பிரதிநிதிகள், சிறப்பு விருந்தினர்கள் என பலரும் அதில் கலந்து சிறப்பித்தனர்.

Alam Aliran Kualiti நிறுவனத்திற்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்த முதலமைச்சர் Chow Kon Yeow, அச்சாதனை மலேசிய பொறியியல் திறனும் புதுமை சிந்தனையும் சுற்றுச்சூழல் சவால்களுக்கு நடைமுறை தீர்வுகளை வழங்கும் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

திட்டத்தின் உண்மையான சிறப்பு, குடிநீர் சுத்திகரிப்பு செயல்முறையில் உருவாகும் கழிவுகளை சுற்றுச்சூழலுக்கு உகந்த Eco Green சிமெண்ட் கட்டுமானச் செங்கற்களாக மாற்றியமைத்து, கழிவுகளைக் குறைப்பதோடு இயற்கை வளங்களைப் பாதுகாத்து, பினாங்கின் நீர்வளப் பாதுகாப்பை வலுப்படுத்துவதிலேயே உள்ளது என்றாரவர்.

இவ்வேளையில், அத்திட்டம் தங்களுக்கும் Alam Aliran Kualiti நிறுவனத்திற்கும் இடையிலான மூலோபாய ஒத்துழைப்பின் சிறந்த எடுத்துக்காட்டாக இருப்பதாக PAAB தலைவர் Dato’ Seri Ir. Jaseni Maidinsa குறிப்பிட்டார்.

நவீன பொறியியல் தொழில்நுட்பத்தின் மூலம் குடிநீர் சுத்திகரிப்புக் கழிவுகளை மதிப்புமிக்க வளங்களாக மாற்றியமைத்துள்ள இம்முயற்சி, நீர் இழப்பைக் குறைத்து, சுற்றுச்சூழல் பாதிப்பைக் கட்டுப்படுத்தி, செயல்பாட்டுச் செலவுகளைக் குறைப்பதோடு, வணிக ரீதியாகப் பயன்படுத்தக்கூடிய மதிப்புமிக்க தயாரிப்புகளையும் உருவாக்குகிறது என்றார்.

NCCIM தலைமையதிகாரி டத்தோ’ ஸ்ரீ என். கோபாலகிருஷ்ணன் பேசுகையில், Alam Aliran Kualiti நிறுவனம் பினாங்கைத் தாண்டி தேசிய அளவில் முன்னணி சுற்றுச்சூழல் பொறியியல் நிறுவனமாக வளர்ந்திருப்பதைப் பாராட்டினார்.

மேலும் பேராக், கெடா, சிலாங்கூர், மலாக்கா, நெகிரி செம்பிலான் மற்றும் ஜோகூர் மாநிலங்களின் நீர் நிறுவனங்கள் நேரில் வருகை தந்து, தங்களது மாநிலங்களிலும் இதே போன்ற திட்டங்களை செயல்படுத்த ஆர்வம் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஒரு காலத்தில் பினாங்கில் தொடங்கப்பட்ட உள்ளூர் நிறுவனம் இன்று நாடு முழுவதும் உள்ள நீர் அமைப்புகளுக்கு முன்னுதாரணமாக விளங்குவது, மலேசியர்களின் தொழில்நுட்ப திறன் தேசிய அளவில் போட்டியிடும் வல்லமையை நிரூபிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!