
தெலுக் பங்லீமா காராங், ஏப் 21 – மலேசிய சைவ சமயப் பேரவையின் ஆதரவில் தெலுக் பங்லீமா காராங் சைவ சமய மன்ற ஏற்பாட்டில் பந்திங் அருள்மிகு சித்தி விநாயகர் ஆலய இணை ஆதரவில் நாயன்மார் பெருவிழா 2026 அண்மையில் ஏப்ரல் 18 மற்றும் ஏப்ரல் 19ஆம் தேதிகளில் மிகவும் சிறப்பாக நடந்தேறியது.
முதல் நாளில் பந்திங் ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய மண்டபத்தில் நடைபெற்ற கோலலங்காட் தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையிலான நாயன்மாரை அறிவோம் புதிர்ப்போட்டியில் சிலாங்கூர், கோலலங்காட் மாவட்டத்தைச் சேர்ந்த 11 தமிழ்ப்பள்ளிகளிலிருந்து 120 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
புதிர்ப்போட்டிக்கு இடையில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டு பரிசுகளையும் தட்டிச் சென்றனர்.
இதனிடையே மறுநாள் நடைபெற்ற நாயன்மார் பெருவிழா 2026 இல் ஸ்ரீ மஞ்சா, நீலாய், தாமான் செந்தோசா மற்றும் சிலாங்கூர் சைவ சமய மன்றங்கள் இணை ஏற்பாட்டாளராகச் செயல்பட்டன.
தெலுக் பங்லீமா காராங் சைவ சமய மன்றத் தலைவர் சிவத்திரு பூபாலன் பூவன் வரவேற்புரையுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் ஏழு நாயன்மாரை மையமாகக் கொண்டு நாயன்மார் வரலாற்று கண்காட்சியை ஸ்ரீ மஞ்சா மற்றும் நீலாய் சைவ சமய மன்றத்தினர் இக்கண்காட்சி திறம்பட ஏற்பாடு செய்து வருகையாளர் அனைவருக்கும் நாயன்மார் வரலாற்றுச் செய்தியை விளக்கினர்.
அதோடு சைவத் திருக்கோயில் கலை கல்வி அறவாரியத்தின் நிறுவனரும் தலைமை அறங்காவலருமாகிய முனைவர் நாகப்பன் ஆறுமுகம் அவர்களிடம் அறவாரிய திருப்பணி சிறக்க தெலுக் பங்லீமா காராங் சைவ சமய மன்றத்தினர் 10,000 ரிங்கிட் மாதிரி காசோலை வழங்கினர்.



