
கோலாலம்பூர் – ஆகஸ்ட்-2 – மலேசியர்களில் 6 பெரியவர்களில் ஒருவருக்கு நீரிழிவு நோய் உள்ளது. அதாவது மொத்த மக்கள் தொகையில் 15.6 விழுக்காட்டினர் அல்லது 3.5 மில்லியன் பேர் நீரிழிவு நோயால் அவதிப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அதிலும் 18 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களில் 84 விழுக்காட்டினர், தங்களுக்கு நீரிழிவு நோய் இருப்பதே தெரியாமல் வாழ்கின்றனர். இது மிகவும் கவலையளிக்கும் வகையிலிருப்பதாக, சுகாதார அமைச்சின் நோய்க் கட்டுப்பாட்டுப் பிரிவு இயக்குநர் Dr Noraryana Hassan தெரிவித்தார்.
80 விழுக்காடு உறுப்பு துண்டிப்புகள் குறிப்பாக கால் துண்டிப்புகள் நீரிழிவு புண்களிலிருந்து தொடங்குவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
நீரிழிவு நோயே, இதய நோய், பக்கவாதம், சிறுநீரக பாதிப்பு, நரம்பியல் கோளாறு, கண் பார்வை இழப்பு போன்ற பல பின்னடைவுகளுக்கு இட்டுச் செல்கிறது.
எனவே, பின்னாளில் அவதிப்படுவதையும் இள வயது மரணங்களைத் தவிர்க்கவும், நீரிழிவு பரிசோதனைகள் இள வயதிலேயே மேற்கொள்ளப்பட வேண்டும். ஆரம்பத்திலேயே தடுக்க அல்லது குறைந்தபட்சம் நோய் தாக்குவதைத் தாமதப்படுத்த இது உதவும் என்றார் அவர்.