Latestமலேசியா

மலேசியா நிரந்தரத் தாயகம்; தற்காலிகப் புகலிடம் அல்ல: சனுசிக்கு அம்னோ பதிலடி

கோலாலம்பூர், ஜூலை-26-மலேசியா என்பது சீன மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மில்லியன் கணக்கான குடிமக்களுக்கு ஒரு நிரந்தரத் தாயகமே தவிர, அது எந்த வகையிலும் தற்காலிகமாக வந்து செல்லும் இடமல்ல என அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ ஸ்ரீ அசாலீனா ஒத்மான் சைட் நினைவூட்டியுள்ளார்.

பெரிக்காத்தான் நேஷனல் தேர்தல் இயக்குனர் டத்தோ ஸ்ரீ சனுசி நோர் வெளியிட்ட பூர்வீக நாடு குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு பதிலளித்துப் பேசிய அவர், இத்தகையப் பேச்சுக்கள் மலாய்க்காரர் அல்லாதவர்கள் இந்நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல என்ற தவறான பிம்பத்தை உருவாக்குவதாகக் குறிப்பிட்டார்.

கூட்டரசு அரசியலமைப்புச் சட்டமானது இஸ்லாம், மலாய் ஆட்சியாளர்கள் மற்றும் பூமிபுத்ரா உரிமைகளுக்கு உரிய இடமளித்துள்ள அதேவேளையில், எந்தவொரு வம்சாவளியைச் சார்ந்த குடிமக்களின் சட்டப்பூர்வ உரிமைகளையும் அது சமமாகப் பாதுகாக்கிறது என்பதை அசாலீனா வலியுறுத்தினார்.

​எனவே, சனுசியின் பேச்சை அம்னோ கடுமையாகக் கருதுவதாக அறிக்கையொன்றில் அவர் குறிப்பிட்டார்.

சட்ட மற்றும் நிறுவன சீர்திருத்தத்துறை அமைச்சருமான அசாலீனா, அரசியல் ஆதாயத்திற்காக இனத்தையும் மதத்தையும் ஆயுதமாகப் பயன்படுத்துவதை விடுத்து, மக்கள் நலப் பிரச்னைகளில் கவனம் செலுத்துமாறு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவோரைக் கேட்டுக் கொண்டார்.

கெடா மந்திரி பெசாருமான சனுசியின் பேச்சு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமது கருத்து திரித்துக் கூறப்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்திருப்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

எந்தவோர் இனத்தையும் தாக்கிப் பேசவில்லை என்றும், வரலாற்றில் உள்ளத்தை மட்டுமே சுட்டிக் காட்டியதாகவும் கூறிக் கொண்ட அவர், தனது பேச்சை திரித்து வெளியிட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!