
புத்ராஜெயா, செப்டம்பர்-20,மலேசியாவில் இளம் வயதினரிடையே இரண்டாம் வகை நீரிழிவு நோய் அதிகரித்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சுகாதார அமைச்சின் தகவல்படி, 14 வயதிற்குட்பட்ட சிறுவர்களிடமும் கூட இந்நோய் கண்டறியப்பட்டு வருகிறது.
கடந்தாண்டு தேசிய நீரிழிவு பதிவேட்டில் 30 வயதுக்குட்பட்ட 1,932 நோயாளிகள் பதிவாகியிருந்த நிலையில், இவ்வாண்டு ஜூன் மாதம் வரை மேலும் 660 புதிய பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
சிறுவயதிலேயே நீரிழிவு பாதிப்பு ஏற்படுவதால், அவர்கள் தங்களின் 30-வது வயதுக்குள்ளாகவே சிறுநீரகச் செயலிழப்பு, பார்வைக் குறைபாடு, நரம்பு பாதிப்பு மற்றும் மாரடைப்பு போன்ற தீவிர உடல்நலச் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என மூத்த குழந்தை நல மருத்துவர் டத்தோ Dr அமார் சிங் எச்சரித்துள்ளார்.
நாட்டில் சிறுவர்களிடையே உடல் பருமன் அதிகரிப்பதே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
2024-ஆம் ஆண்டு தேசிய சுகாதார மற்றும் நோயுற்ற தன்மை ஆய்வின்படி, 28 விழுக்காடு பள்ளி மாணவர்கள் ஆரோக்கியமற்ற உடல் எடையைக் கொண்டுள்ளனர்.
மரபணு ஒரு காரணமாக இருந்தாலும், அறவே உடற்பயிற்சி இல்லாதது, அதிக நேரம் தொலைக்காட்சிப் பார்ப்பது மற்றும் சீனி கலந்த பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதே இந்நோய் வேகமாகப் பரவ முக்கியக் காரணங்களாக உள்ளன.



