
கோலாலாம்பூர், ஜூலை-15-மலேசியாவில் இஸ்ரேல் நாட்டினர் எவரேனும் இருப்பது கண்டறியப்பட்டால், அவர்கள் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள் என, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஜோகூர், Forest City-யில் உள்ள ‘நெட்வொர்க் ஸ்கூல்’ (Network School) திட்டத்தில் இஸ்ரேல் நாட்டினர் பங்கேற்றதாக எழுந்துள்ள புகார்கள் குறித்துப் பேசிய பிரதமர், இஸ்ரேலை அங்கீகரிக்காத தெளிவான வெளியுறவுக் கொள்கையை மலேசியா கொண்டுள்ளதால் இந்த விஷயத்தில் எந்தவொரு சமரசமும் செய்யப்பட மாட்டாது என்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக நாட்டின் அனைத்துப் பாதுகாப்பு நிறுவனங்களும் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இரட்டை குடியுரிமை மற்றும் மாற்று நாட்டு கடப்பிதழ்களைப் பயன்படுத்தி அவர்கள் மலேசியாவுக்குள் நுழைந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
இது குறித்துக் கல்வி அமைச்சு மற்றும் உயர்கல்வி அமைச்சும் விரைவில் விரிவான விளக்கத்தை அளிக்கும் என்றும் அன்வார் தெரிவித்தார்.
பொது மக்களிடையே பெரும் சர்ச்சையையை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவறு ஏதேனும் கண்டறியப்பட்டால் சட்டப்படி மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.



