
ஷா ஆலாம், ஆகஸ்ட்-10-சிலாங்கூர், Kuala Langatடில் உள்ள மின் உற்பத்தி நிலையமொன்றின் குளிரூட்டும் கோபுரத்தில் பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவர், ஐந்து மீட்டர் ஆழமுள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
அச்சம்பவம் குறித்து நேற்று மாலை சுமார் 7.29 மணிக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் Ashrul Riezal Asbar தெரிவித்தார்.
மின் உற்பத்தி நிலையத்திலிருந்த இரண்டு நீர்ப் பகுதிகளில் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்ட நிலையில், இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் 34 வயதான அந்த உள்ளூர் ஆடவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
சம்பவத்தின் போது அந்நபர் சக ஊழியருடன் சேர்ந்து குளிரூட்டும் கோபுரத்தில் மரப்பலகைகளை மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கூடுதல் மரப் பலகைகளை எடுத்து வர சக ஊழியர் அங்கிருந்து அகன்றார்.
15 நிமிடங்களுக்குப் பிறகு அவ்விடத்திற்குத் திரும்பிய போது, அந்நபர் அங்கு இல்லை. அவர் கழிவறைக்குச் சென்றிருக்கலாம் என தொடக்கத்தில் நினைத்த சக ஊழியர், நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வராததால், அவர் நீரில் தவறி விழுந்திருக்கலாம் என்ற சந்தேகம் உண்டானது.
அவர் அத்தகவலை மேற்பார்வையாளரிடம் தெரிவிக்க, வருகையைப் பதிவு செய்து சரி பார்த்த போது, அந்நபர் காணாமல் போனது தெரிய வந்ததாக Ashrul Riezal கூறினார். மேல் நடவடிக்கைக்காக அச்சம்பவம் குறித்த விசாரணை பணி காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.



