
புத்ராஜெயா, ஜூலை-14 – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC, முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகம் மற்றும் நிதி மேலாண்மையை மேம்படுத்த 6 முக்கிய பரிந்துரைகளை KPKT எனப்படும் வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சிடம் சமர்ப்பித்துள்ளது.
அரசாங்க நிதியைப் பெற்றும் பராமரிப்புப் பணிகளைச் செய்யாத முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் குறித்து நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, இப்பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அவ்வகையில், அனைத்து முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களும் சங்கங்களின் பதிவிலாகாவான ROS அல்லது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட அமைப்பின் கீழ் பதிவுச் செய்யப்பட வேண்டும்.
பழுதுபார்க்கும் பணிகளுக்கு விரிவான படிவங்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுக்கள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்பட ஆதாரங்களுடன் கூடிய ஆய்வறிக்கைகள் கட்டாயமாக்கப்பட வேண்டும்.
தவிர, MACC சட்டத்தின் பிரிவு 18-ன் கீழ், விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்கும் அனைத்து ஆவணங்களும் உண்மையானவை என்று சான்றளிக்க வேண்டும்.
திட்டங்களுக்கான கால நீட்டிப்புகள் மிகக் கடுமையான மற்றும் விதிவிலக்கான சூழ்நிலைகளில் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்றும் MACC பரிந்துரைத்துள்ளது.
அதோடு பயன்படுத்தப்படாத நிதியைத் திருப்பிச் செலுத்துவதற்கும், ஒரு வழிபாட்டுத் தலம் விண்ணப்பத்தின் நிபந்தனைகளை மீறியதாகக் கண்டறியப்பட்டால், அந்த நிதியைத் திரும்பப் பெறுவதற்கும் ஒரு குறிப்பிட்ட நடைமுறையை அறிமுகப்படுத்த வேண்டும் என MACC வலியுறுத்தியுள்ளது.
அரசு நிதியைப் பெற்றும் பணிகள் நடைபெறாத சம்பவங்களைத் தடுப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என MACC தெரிவித்துள்ளது.
புத்ராஜெயாவில் இந்தப் பரிந்துரை அறிக்கையைப் பெற்றுக் கொண்ட KPKT அமைச்சின் துணைத் தலைமைச் செயலாளர் Zulkeflee Sulaiman, அதனை அமைச்சு ஆய்வு செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.



