Latestமலேசியா

லாபு பிரிவு 4 தமிழ்ப்பள்ளி இடமாற்றப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு; RM9 மில்லியன் மதிப்பில் புதிய பள்ளி கட்டுமானப் பணிகள் தொடக்கம்

லாபு, ஜூலை-9 – பல ஆண்டுகளாக இழுபறியில் இருந்த லாபு தோட்டம் பிரிவு 4 தமிழ்ப்பள்ளியின் இடமாற்றப் பிரச்னைக்கு தற்போது முழுமையான தீர்வு காணப்பட்டு, 9 மில்லியன் ரிங்கிட் மதிப்பில் புதிய பள்ளி கட்டடக் கட்டுமானப் பணிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளன.

இந்தத் திட்டம் கூட்டு நிதி ஒதுக்கீட்டு முறையில் செயல்படுத்தப்படுகிறது.

Matrix Concepts Holdings Berhad நிறுவனம் கட்டுமானச் செலவில் 50 விழுக்காட்டை ஏற்கும் வேளையில், பொது மக்கள் மற்றும் தனியார் தரப்பினர் இணைந்து 2.7 மில்லியன் ரிங்கிட் நிதியைத் திரட்டியுள்ளனர்.

பொது மக்களின் இந்த தீவிர முயற்சியைத் தொடர்ந்து, புதிய பள்ளி உருவாக்கத்தை முழுமைப்படுத்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எஞ்சிய 2 மில்லியன் ரிங்கிட் அவசர நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்.

இது குறித்து கருத்துரைத்த பிரதமரின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன், இத்திட்டம் தேர்தல் அரசியல் விளையாட்டு அல்ல என்றும், மாறாக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற முதல் நாளிலிருந்தே தமிழ்ப்பள்ளிகளின் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண்பதில் மடானி அரசாங்கம் உறுதியாகச் செயல்பட்டு வருகிறது என்றும் வலியுறுத்தினார்.

இவ்விவகாரத்தில் அரசு நிறுவனங்களை ஒருங்கிணைத்து, அலுவல்களை விரைவுப்படுத்துவதில் போக்குவரத்து அமைச்சரும் சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினருமான அந்தோணி லோக், மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அருள் குமார் உள்ளிட்டோரின் பங்களிப்பும் அளப்பரியது என சண்முகம் பாராட்டினார்.

இதற்கு முன்னதாக, கடந்த 2024-ஆம் ஆண்டில் லாபு தோட்டம், சாகா தோட்டம், பெர்தாங் தோட்டம் உள்ளிட்ட 4 தமிழ்ப்பள்ளிகளின் கட்டுமானப் பணிகளை அரசாங்கம் வெற்றிகரமாக நிறைவுச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!