
சிரம்பான், ஜூன்-7-‘நெகிரி செம்பிலான் சுற்றுலா ஆண்டு 2026’ பிரச்சார இயக்கத்தை முன்னிட்டு, சிரம்பான் மாவட்டத் தமிழ்ப்பள்ளிகளுக்காக வரலாற்றிலேயே முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் ‘பாரம்பரிய கலை விழா’ நேற்று சிரம்பான் பிரிமா மால் பேரங்காடியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கத்தின் PRANGKAT திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட இப்புத்தாக்கப் பட்டறையில், சிரம்பான் மாவட்டத்தின் 7 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 80 மாணவர்கள் மிக ஆவலோடு கலந்துகொண்டனர்.
இந்தியச் சமுதாயத்தின் தொன்மையான குகை ஓவியங்கள் மற்றும் பாரம்பரியக் கலைகள் நவீன யுகத்தில் அழிந்துவிடக் கூடாது என்ற நோக்கில் இத்திட்டம் அரங்கேறியது.
மலேசிய இந்திய ஓவியர்கள் சங்கமான ‘ஐகோம்’ மற்றும் மாவட்டக் கல்வி அலுவலகத்தின் கூட்டு முயற்சியோடு நடைபெற்ற இந்நிகழ்வின் நிறைவு விழாவில், சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டுத் துறைகளுக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் Nicole Tan Lee Koon கலந்துகொண்டு மாணவர்களின் அசாத்திய ஓவியப் படைப்புகளைப் பாராட்டி அதிகாரப்பூர்வமாக நிறைவுச் செய்து வைத்தார்.
போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்களும், ஒவ்வொரு பள்ளியின் சிறந்த மூன்று படைப்புகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன.
நெகிரி செம்பிலான் தமிழ்ப்பள்ளி வரலாற்றில் இத்தகைய கலைப் பட்டறை நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும் என, லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் மாரன் குமாரசாமி தெரிவித்தார்.
பிள்ளைகளின் கைவண்ணமும், கற்பனைத் திறனும் தங்களை வியக்க வைத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மாணவர்களின் கலைத் திறனை ஊக்குவித்த ஆட்சிக் குழு உறுப்பினர் அலுவலகத்திற்கும், பெற்றோர்களுக்கும் நன்றித் தெரிவித்துக் கொண்டார்.
நிகழ்வில் பங்கேற்று பயனடைந்த மாணவர்கள் சிலர் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கலை விழா, தமிழ்ப்பள்ளி மாணவர்களின் பன்முகத் திறனை உலகறியச் செய்யும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.



