டாக்கா, ஆகஸ்ட்-16 – வங்காளதேசத்தில் கடந்த மாதம் மாணவர்கள் முன்னின்று நடத்திய அரசு எதிர்ப்பு போராட்டங்களில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதை விசாரிப்பதற்காக, ஐக்கிய நாடுகள் சபை (ஐநா) அடுத்த வாரம் டாக்கா செல்கிறது.
அந்த சுயேட்சை விசாரணை ஆணையம் முழுக்க முழுக்க ஐநாவின் மேற்பார்வையில் அங்கு விசாரணைகளை மேற்கொள்ளும்.
விசாரணைக்கான காலவரை, அதனை மேற்கொள்ளும் முறை உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.
நேற்று வங்காளதேச இடைக்கால அரசின் வெளியுறக் கொள்கை தொடர்பான ஆலோசகருடன் நடத்திய சந்திப்புக்குப் பிறகு, அந்த உலக அமைப்பின் பிரதிநிதி அவ்வாறு சொன்னார்.
ஜூலை மாத மத்தியில் இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடங்கிய போராட்டங்கள் வன்முறையாக மாறியது முதல் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி துறந்து நாட்டை விட்டு தப்பியோடியது வரை, இதுவரை 580 பேர் கொல்லப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து மனித உரிமை அமைப்புகள் பெரும் கவலைத் தெரிவித்திருந்த நிலையில், தற்போது ஐநா விசாரணையில் இறங்கியுள்ளது.