
சுங்கை பட்டாணி, ஜூலை-16-கெடா, சுங்கை பட்டாணியில் கடன் வாங்கியவர்களைத் தொந்தரவு செய்ததோடு அவர்களை அச்சுறுத்தியதாக ஒப்புக் கொண்ட இரு ஆடவர்களுக்கு தலா 18 மாதங்கள் சிறைத் தண்டனையும் 20,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.
வட்டி முதலையால் கூலிக்கு அமர்த்தப்பட்ட அவ்விரு நபர்களும் தங்களின் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.
மார்ச் 14 ஆம் தேதி அதிகாலையில் Taman Sri Putraவில் ஒருவரின் காரின் மீது சிவப்பு வண்ணம் தெளித்ததாக முதல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
ஏப்ரல் 21 ஆம் தேதி காலை 5.30 மணிக்கு, Taman Berjayaவில் கார் மற்றும் வீடொன்றின் வேலிக் கதவில் மஞ்சள் நிற சாயத்தைத் தெளித்ததாக அவர்கள் மீது இரண்டாவது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு RM10,000க்குக் குறையாமலும் RM50,000க்கு மேற்போகாமலும் அபராதம் விதிக்கப்படலாம் அல்லது ஈராண்டுகளுக்கு மேற்போகாத சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
பின்னர் நீதிமன்றம், முதல் குற்றச்சாட்டுக்காக ஒவ்வொருவருக்கும் RM10,000 அபராதமும் எட்டு மாத சிறைத்தண்டனையும் விதித்தது. அபராதத்தைச் செலுத்தத் தவறினால், அவர்களுக்குக் கூடுதலாக மூன்று மாத சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
இரண்டாவது குற்றச்சாட்டுக்காக, இருவருக்கும் தலா RM10,000 அபராதமும் 10 மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. அவர்கள் அபராதத்தைச் செலுத்தத் தவறினால், அவர்களுக்குக் கூடுதலாக நான்கு மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும்.



