
புத்ராஜெயா, செப்டம்பர்-26,
சரவாக், மீரியில் உள்ள IKBN எனப்படும் தேசிய இளையோர் திறன் கழகத்தில் சக மாணவனை, கிட்டத்தட்ட பகடிவதை போலான வரம்பு மீறிய குறும்புக்கு உட்படுத்தி வைரலான 7 பேரும், ஒரு வாரத்திற்கு வகுப்புகளிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹானா இயோ அந்த அதிரடி முடிவை அறிவித்துள்ளார்.
அவர்களின் கல்வி உதவித்தொகையும் உடனடியாக நிறுத்தப்பட்டதுடன், சமூகப்பணியில் ஈடுபடுதல், ஒழுங்கு அலுவலரைத் தவறாமல் சந்தித்து கையெழுத்துப் போடுதல் போன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
அதோடு, ஒரு மாதத்திற்கு கல்லூரி வளாகத்திலிருந்து வெளியே போகவும் அவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த எழுவரோடு, பாதிக்கப்பட்ட மாணவரும், ஆலோசனை அமர்வில் பங்கேற்பது கட்டாயமாகும்.
கல்வி நிறுவனங்களில் வரம்பு மீறிய இத்தகைய குறும்புகளை அனுமதிக்க முடியாது; இது ஆரோக்கியமற்ற பண்பாட்டை உருவாக்கும் என ஹானா சொன்னார்.
இதை வளர விட்டால், கடைசியில் பகடிவதையில் போய் முடியும் என்றார் அவர்.
தடுப்பு நடவடிக்கையாக, அடிக்கடி கண்காணிப்பு மேற்கொள்வது, ஊக்கப் பயிற்சிகள் மற்றும் போலீஸுடன் இணைந்து ஆண்டுக்கு 4 முறை சொற்பொழிவுகள் நடத்துவது ஆகியவை முன்னெடுக்கப்படும்.
மேலும் மாணவர்கள் புகார்களை உடனடியாக தெரிவிக்க ‘புகார் பெட்டி’யும் ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மாணவரும், அவரது குடும்பமும் சட்ட நடவடிக்கையைத் தொடர விரும்பவில்லை என்றாலும், இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாமல் இருக்க அமைச்சு கடும் ஒழுங்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ஹானா நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
அந்த 7 மாணவர்களும், பாதிக்கப்பட்ட மாணவனைத் தூக்கி அவனது அந்தரங்கப் பகுதி தூணில் படும் அளவுக்கு ‘குறும்புத்தனமாக’ விளையாடி வீடியோ வைரலாகி, கண்டனங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.