“வருத்தமோ, கோபமோ இல்லை!” கூட்டணி நுழைவை மீட்டுக் கொண்ட பெரிக்காத்தான் முடிவு குறித்து ம.இ.கா தலைவர் விக்னேஸ்வரன் கருத்து

கோலாலம்பூர், ஜூன்-1 – பெரிக்காத்தான் நேஷனல் (PN) கூட்டணியில் ம.இ.கா இணைவது இரத்துச் செய்யப்பட்ட விவகாரத்தில், தங்களுக்கு எவ்வித வருத்தமும் அல்லது கோபமும் இல்லை என்று ம.இ.கா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஈப்போவில் நடைபெற்ற கட்சியின் 80-ஆவது ஆண்டு விழாவின் குடும்ப தின நிகழ்வில் பேசிய அவர், பெரிக்காத்தான் கூட்டணியில் ம.இ.கா இணைவதற்கான ஆரம்பக்கட்ட ஆதரவு, அது பெர்சாத்து கட்சியாலும், தான் ஸ்ரீ முஹிடின் யாசினாலும் வழிநடத்தப்பட வேண்டும் என்ற அடிமட்டத் தொண்டர்களின் நிபந்தனையின் பேரிலேயே எடுக்கப்பட்டது என்றார்.
தற்போது பெரிக்காத்தானில் தலைமைத்துவ மாற்றம் ஏற்பட்டுள்ளதால், ம.இ.கா தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டியுள்ளது என அவர் விளக்கமளித்தார்.
மற்ற கட்சித் தலைவர்களைப் போல தம்மால் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது என்றும், கட்சியின் மத்திய செயற்குழு மற்றும் தொண்டர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மேலும், தற்போதைய சூழலில் ம.இ.கா தொடர்ந்து பாரிசான் நேஷனல் (BN) கூட்டணியிலேயே நீடிக்கும் என்றும் விக்னேஸ்வரன் உறுதிப்படுத்தியுள்ளார்.
பெரிக்காத்தானில் இணைய ம.இ.கா செய்திருந்த விண்ணப்பத்திற்கு சரியான பதில் வராததால், அக்கட்சிக்கு கதவு முழுமையாக அடைக்கப்படுவதாக பெரிக்காத்தான் உச்சமன்றம் கடந்த வாரம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



