வாக்குறுதிகளை அல்ல, செயல்பாடுகளை மதிப்பிடுங்கள்; மடானி அரசின் RM1.15 பில்லியன் பங்களிப்பை சுட்டிக்காட்டிய பிகேஆர் கட்சியின் சிவமலர்

சிரம்பான், ஜூலை 29 – நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலை முன்னிட்டு, இந்தியச் சமூகத்திற்கான மடானி அரசின் பங்களிப்புகள் குறித்து, பிகேஆர் மத்திய தலைமைக் குழு உறுப்பினர் சிவமலர் கணபதி இன்று செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்தார்.
2023-ஆம் ஆண்டு முதல் கல்வி, பொருளாதாரம், சமூக மேம்பாடு, மொழி மற்றும் கலாச்சார வளர்ச்சிக்காக மடானி அரசு RM597.5 மில்லியன் ஒதுக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சிவமலரின் கூற்றுப்படி, MITRA-க்கு RM450 மில்லியன், MIED-க்கு RM101 மில்லியன், மேலும் நாடு முழுவதும் உள்ள 344 இந்து ஆலயங்களின் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டிற்காக RM46.5 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது.
இதனுடன், தமிழ்ப்பள்ளிகளுக்கான புதிய கட்டடங்கள், பராமரிப்பு பணிகள், TAFE கல்லூரிக்கு நிதி, தமிழ் மொழி மேம்பாடு, சமூக உள்கட்டமைப்பு, தொழில்முனைவோர் நிதி உதவிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கும் அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், இந்தியச் சமூகத்திற்கான பொருளாதார நிதி உதவிகள் மற்றும் பல்வேறு மேம்பாட்டு திட்டங்கள் அனைத்தையும் சேர்த்து, அரசின் மொத்த பங்களிப்பு RM1.1531 பில்லியனை எட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில், அரசியல் வாக்குறுதிகளை விட அரசின் செயல்பாடுகள் மற்றும் சாதனைகளை அடிப்படையாகக் கொண்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்றும் சிவமலர் கணபதி வலியுறுத்தினார்.
இச்சந்திப்பில் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜும் கலந்துக் கொண்டார்.



