
கோலாலம்பூர், ஆகஸ்ட்-16-தீயணைப்பு மற்றும் மீட்புப்படை என்றாலே கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைப்பதும், வெள்ளத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றுவதும்தான் நம் நினைவுக்கு வரும்.
ஆனால், நமது தீயணைப்பு வீரர்கள் சில விசித்திரமான அழைப்புகளையும் எதிர்கொள்கிறார்கள்.
வீட்டின் மேற்கூரையில் பதுங்கியிருக்கும் இராட்சத மலைப்பாம்புகள் முதல், கழிவறைக் குழிகளில் தலையைக் காட்டும் விஷப் பாம்புகள் வரை… தீயணைப்புப் படையினர் சந்திக்காத சவால்களே இல்லை.
ஆனால், வனவிலங்குகள் மட்டுமே இவர்களின் அன்றாடப் பட்டியலில் இருப்பதில்லை என்கிறார், மலேசியத் தீயணைப்பு – மீட்புத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ ஸ்ரீ ஹிஷாம் மொஹமட்.
விரலில் இறுக்கமாக மாட்டிய மோதிரங்களை அகற்றுவது, ஜன்னல் கம்பிகளுக்கு நடுவே தலையை நுழைத்து மாட்டிக்கொள்ளும் குறும்புக்கார சிறுவர்கள், ஆணுறுப்பில் மோதிரங்களை மாட்டி ‘சுகம் கண்டு’ விட்டு வெளியில் எடுக்க முடியாமல் தவிக்கும் சில ஆடவர்கள் மற்றும் குழந்தைகள் விளையாடும் ஊஞ்சலில் புகுந்து வெளியே வர முடியாமல் தவிக்கும் விடலை பருவத்தினரை மீட்பது என, தீயணைப்பு -மீட்புப் படையினரின் பட்டியல் நீளுகிறது.
இணையத்தில் பார்க்கும்போது இவை வேடிக்கையாகத் தெரிந்தாலும், ஒவ்வோர் அவசர அழைப்பையும் வீரர்கள் மிகுந்த அக்கறையுடனும் தீவிரமாகவும் கையாளுகின்றனர்.அதே சமயம், கனரக வாகனங்களை வெட்டப் பயன்படும் கருவிகளுக்குப் பதிலாக, சில நேரங்களில் நுணுக்கமான கருவிகளை இவர்கள் கையில் எடுக்க வேண்டியுள்ளது.
கடந்தாண்டு மட்டுமே நாடு முழுவதும் இத்தகைய 72, 977 சிறப்பு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளன; 2024-ஆம் ஆண்டைக் காட்டிலும் இது 10 விழுக்காடு அதிகமாகும்.தவிர, போலி அவசர அழைப்புகளும் ஒரு பிரச்னையாகவே உள்ளது.
2024 முதல் இவ்வாண்டு ஜூன் வரை, போலி அல்லது தீயணைப்பு -மீட்புத் துறை வரவேண்டிய அவசியமில்லாத சம்பவங்கள் தொடர்பில் 156 அழைப்புகள் பெறப்பட்டுள்ளன.
ஆனால், எந்தவொரு விசித்திரமான சூழ்நிலையிலும் அதிகாரிகள் உதவத் தயாராக உள்ளனர்; இருந்தாலும், விளையாட்டுப் பொருட்களையும் நகைகளையும் பயன்படுத்தும்போது பொது மக்கள் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என டத்தோ ஸ்ரீ ஹிஷாம் நினைவூட்டினார்.



