
கிள்ளான், ஜூலை-17- கிள்ளானில், பள்ளியில் விஷம் குடித்து உயிரிழந்ததாக கூறப்படும் 17 வயது மாணவியின் பெற்றோர், பள்ளி நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயலைச் சுட்டிக் காட்டி மகளுக்கு நீதிக் கேட்கின்றனர்.
மே 27-ஆம் தேதியன்று நடந்த சம்பவத்தில், பள்ளி ஊழியர்கள் அவசர உதவி வழங்காமல் அம்புலன்ஸ் வண்டி வரட்டும் என காத்திருக்க முடிவுச் செய்ததாக, மாணவியின் தந்தை எம். கோபாலன், தாய் பி. மகேஸ்வரி ஆகியோர் குற்றம் சாட்டினர்.
அருகிலுள்ள கிளினிக்கிற்கு மாணவியை அழைத்து செல்லக்கூடிய நிலையில், SOP நடைமுறைகளைச் சுட்டிக் காட்டி பள்ளி அவ்வாறு செய்யவில்லை என, கோபாலன் நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
அம்புலன்ஸ் வரும் வரை முதலுதவி சிகிச்சை கூட வழங்கவில்லை என்றார் அவர்.
“இதுவொரு மாரடைப்பால் இருந்திருந்தால் கூட, அதை ஏற்றுக்கொண்டிருப்பேன். ஆனால் ‘SOP வடிவில்’ என் மகளை இன்று பறிகொடுத்து நிற்கிறேன்” என அவர் வேதனையுடன் குறிப்பிட்டார்.
பள்ளி முதல்வரோ அல்லது வகுப்பு ஆசிரியரோ ‘மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாமா?’ என்று கேட்டிருந்தால், நான் உடனே ஒப்புக் கொண்டிருப்பேன்” என்றார் அவர்.
பள்ளி இடைவேளையின் போது சம்பந்தப்பட்ட மாணவி, 3 சக மாணவர்களுடன் வகுப்பறையில் விஷம் குடித்ததாகவும், பின்னர் வாயில் நுரைத் தள்ளி மயங்கி விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
“ஒரு மாணவி என்னை அழைத்து, உங்கள் மகளுக்கு வயிற்று வலி…, எப்போதும் உங்களையே கேட்டுக் கொண்டிருந்தாள் என்று சொன்னார்.
நானும் அவள் gastric வலியால் தவிக்கிறாள் என்று தான் நினைத்தேன்,” என தாய் மகேஸ்வரி கூறினார்.
பெற்றோர் அவளை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில், பள்ளி அழைத்த அம்புலன்ஸ் வந்து தடுத்து, மாணவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது.
ஆனால் மருத்துவமனையைச் அடைந்ததும், மாணவி இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அலட்சியமாக இருந்ததாகக் கூறி பள்ளியின் 6 ஊழியர்களுக்கு எதிராக ஒரு புகாரும், மகளுக்கு விஷம் குடிக்க அழுத்தம் கொடுத்ததாக கூறப்படும் 3 மாணவர்களுக்கும் எதிராக இன்னொரு புகாரையும் பெற்றோர் செய்துள்ளானர்.
பள்ளி நிர்வாகம், மாணவிகள் மற்றும் சாட்சிகளை சம்பவம் குறித்து பேசவே தடுப்பதாகவும் கோபாலன் குற்றம் சாட்டினார்.எனவே இந்த வழக்கை போலீஸார் முழுமையாக விசாரிக்க வேண்டும்.
என் மகளின் மரணத்திற்கு பள்ளி பொறுப்பேற்க வேண்டிய நிலை இருக்கிறதா என்பதை நிரூபிக்க, மரண விசாரணைக்கும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த குடும்பத்திற்கு சமூக ஆர்வாழர் அருண் துரைசாமி உதவுகிறார்.