
கெனிங்காவ், அக்டோபர்-13,சபா, கெனிங்காவில் வீட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் தலையில் சுடப்பட்ட 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில், Sook எனுமிடத்தில் உள்ள கிராம ரப்பர் தோட்டக் குடிசையில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
சம்பவத்தின் போது உயிரிழந்த சிறுவனும் மற்றொரு சிறுவனும் அங்கிருந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
அப்போது, ‘ginsok’ எனப்படும் வீட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியிலிருந்து தோட்டா பாய்ந்ததில், 11 வயது சிறுவன் தலையில் படுகாயமடைந்ததாக நம்பப்படுகிறது.
உடனடியாக கெனிங்காவ் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்ட அவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
கோத்தா கினாபாலு, குயின் எலிசபெத் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட உடற்கூறு பரிசோதனையில், தலையில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டுக் காயமே மரணத்திற்குக் காரணம் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இதனிடையே, சம்பந்தப்பட்ட துப்பாக்கி எவ்வாறு பெறப்பட்டது, சேமிக்கப்பட்டது மற்றும் கையாளப்பட்டது என்பது குறித்து விசாரணை நடைபெறுவதாக கெனிங்காவ் மாவட்ட போலீஸ் தலைவர் Erwansyah Abdul Basir தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் 2001 சிறார் சட்டம் மற்றும் 1960-ஆம் ஆண்டு ஆயுதச் சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.



