
அலோர் ஸ்டார், அக்டோபர்-13,இந்திய போலீஸ் அதிகாரிகளாக ஆள்மாறாட்டம் செய்து, இணைய மோசடியில் ஈடுபட்டதாக நம்பப்படும் கும்பலை கெடா போலீஸார் முறியடித்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை, கூலிம், பண்டார் புத்ராவில் உள்ள வணிக வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையில், 48 பேர் கைதுச் செய்யப்பட்டனர்.
கைதானவர்களில் 7 மலேசியர்கள், 33 பாகிஸ்தானியர்கள் மற்றும் 8 இந்தியர்கள் அடங்குவர்.
ஆகஸ்ட் மாத இறுதியிலிருந்து செயல்பட்டு வந்ததாக நம்பப்படும் இக்கும்பல், டெலிகிராம் வாயிலாக இந்தியாவில் உள்ளவர்களைக் குறிவைத்து மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதுவரை 73 பேர் ஏமாற்றப்பட்டுள்ள நிலையில், சுமார் 1.4 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கெடா போலீஸ் தலைவர் டத்தோ Adzli Abu Shah தெரிவித்தார்.
சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகப் பாதிக்கப்பட்டவர்களை மிரட்டி, விசாரணைக்காகப் பணத்தை வங்கிக் கணக்குகளுக்கு மாற்றுமாறு சந்தேக நபர்கள் கூறியுள்ளனர்.
சோதனையின்போது 89 கைப்பேசிகள், 7 மடிக்கணினிகள், இந்திய போலீஸ் சீருடைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதனிடையே, தொடர் நடவடிக்கையில் மேலும் ஐந்து மலேசியர்கள் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
இதனால், இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது.
குற்றவியல் சட்டம் மற்றும் குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெறுகிறது.



