பெட்டாலிங் ஜெயா, நவம்பர்-30, தங்களது இந்தோனீசிய வீட்டுப் பணிப்பெண்ணுக்கு மூன்றாண்டுகளாக நரக வேதனையைக் கொடுத்தக் குற்றத்திற்காக, ஒரு போலீஸ்காரருக்கு 12 ஆண்டுகளும் அவரின் மனைவிக்கு 10 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரு மாதத்திற்குள் 80,000 ரிங்கிட்டை இழப்பீடாக வழங்க வேண்டும்; இல்லையேல் கூடுதலாக 6 மாத சிறைவாசத்தை அனுபவிக்க வேண்டுமென 40 வயது S விஜயன் ராவ், 37 வயது K ரினேஷினி நாயுடு இருவரும் உத்தரவிடப்பட்டனர்.
அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை அரசு தரப்பு தக்க ஆதாரங்களுடன் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்திருப்பதாக, பெட்டாலிங் ஜெயா செஷன்ஸ் நீதிமன்றம் கூறியது.
அப்ணிப்பெண்ணின் தலை, கழுத்து, நெஞ்சு, முதுகு மற்றும் கைகளில் 40-கும் மேற்பட்ட காயங்களும், 61 தழும்புகளும் இருந்தது தடயவியல் நிபுணர்களால் உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
சித்ரவதை நடந்திருப்பது, பொறுப்புடன் செயலாற்ற வேண்டிய போலீஸ்காரர் வீட்டில்; ஆகவே தக்க தண்டணையை வழங்க வேண்டியது நீதிமன்றத்தின் கடமை என நீதிபதி சொன்னார்.
பணிப்பெண் என்பவர் உணர்ச்சியில்லாத பொம்மை அல்ல; மலிவான பொருளும் அல்ல;
நம்மைப் போல சக மனிதர்களே என நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக் காட்டினார்.
கடும் தீங்கு விளைவித்தற்காக ரினேஷினிக்கு தனியாக 4 ஆண்டுகள் சிறையும், 5,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்ட வேளை, முறையான பெர்மிட் இல்லாமல் பணிப்பெண்ணை வேலைக்கு வைத்தக் குற்றத்திற்காக விஜயனுக்குத் தனியாக 6 மாத சிறையும் 25,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.
எனினும் சிறைத்தண்டனை ஏக காலத்தில் அமுலுக்கு வருமென நீதிபதி அறிவித்தார்.
உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து முடிவு வரும் வரை, தண்டனை அமுலாக்கத்தை ஒத்தி வைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
2022 மார்ச் முதல் ஆகஸ்ட் வரை கோம்பாக், தாமான் இண்டாஸ்திரியில் உள்ள வீட்டில் அக்குற்றத்தைப் புரிந்ததாக அத்தம்பதி குற்றம் சாட்டப்பட்டிருந்தனர்.