
மஸ்கட், ஜூன்-26 – அனைத்துலக வணிகக் கப்பல்கள் Hormuz நீரிணையைக் கடந்துசெல்ல எவ்வித சுங்கக் கட்டணமும் வசூலிக்கப்படாது என ஓமான் நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பஹ்ரேய்னில் நடைபெற்ற வளைகுடா நாடுகள் மற்றும் அமெரிக்கா இடையேயான கூட்டத்தில் கலந்துகொண்ட ஓமானிய வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தஉத்தரவாதத்தை வழங்கியுள்ளார்.
இதனால், கப்பல் போக்குவரத்துக்கு புதிய கட்டணங்கள் விதிக்கப்படலாம் என உலகச் சந்தையில் நிலவி வந்த பெரும் பதற்றம் முடிவுக்கு வந்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே ஏற்பட்டுள்ள தற்காலிக ஒப்பந்தம் மற்றும் ஓமானின் இந்த அறிவிப்பால், அனைத்துலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை போர் தொடங்குவதற்கு முந்தைய நிலைக்கு கடுமையாக சரிந்துள்ளது.
Brent கச்சா எண்ணெய் 4 விழுக்காடு சரிந்து பீப்பாய்க்கு 74 டாலருக்கும் கீழாகவும், அமெரிக்க கச்சா எண்ணெய் 70 டாலருக்கும் கீழாகவும் குறைந்துள்ளது.
தற்போது புதிய மற்றும் பாதுகாப்பான மாற்று வழித்தடங்கள் மூலம் கப்பல்கள் கட்டணமின்றி வெற்றிகரமாக பயணித்து வருவது உலகப் பொருளாதாரத்திற்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.



