
கோலாலம்பூர், செப்டம்பர் 29 – சிப்பாங் அனைத்துலக கார் பந்தயத் திடலில் அக்டோபர் 2 முதல் 4ஆம் தேதி வரை ஃபார்முலா 1 போட்டி நடைபெறவுள்ளது .இந்நிலையில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம், தெர்மினல் 2-ல் பயணிகள் கூட்டமும் போக்குவரத்து நெரிசலும் அதிகரிக்கலாம் என்பதால், பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுமாறு ஏர் ஏசியா பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
அனைத்துலக விமானப் பயணிகள் புறப்படும் நேரத்திற்கு குறைந்தது 3 மணி நேரத்திற்கும், உள்நாட்டு விமானப் பயணிகள் 2 மணி நேரத்திற்கும் முன்பாக விமான நிலையத்தை வந்தடையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். ஏர் ஏசியா MOVE செயலி அல்லது இணையதளம் மூலம் முன்பதிவு சரிபார்ப்பை முன்கூட்டியே முடிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்துலகப் பயணம் மேற்கொள்ளும் மலேசியக் கடப்பிதழ் வைத்திருப்பவர்கள், குடிநுழைவுச் சோதனையை விரைவாக முடிக்க MyNIISe அல்லது MyBorderPass செயலிகளைப் பயன்படுத்தலாம். விமான நிலையத்திற்குச் செல்ல ERL ரயில் சேவையைப் பயன்படுத்துமாறும் ஏர் ஏசியா பரிந்துரைத்துள்ளது.
ஃபார்முலா 1 போட்டி நடைபெறும் நாட்களில் முக்கியச் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால், பயணிகள் கூடுதல் நேரத்தை ஒதுக்கி, மாற்று வழிகளைத் திட்டமிடுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.



