Latestஉலகம்

அமெரிக்காவில் சரக்குக் கப்பல் மோதி பெரியப் பாலமே இடிந்து விழுந்ததில், அறுவரை காணவில்லை

பல்டிமோர் (அமெரிக்கா), மார்ச் 27 – அமெரிக்காவின் Maryland மாநிலத்தின் பரபரப்பு மிக்க Baltimore துறைமுகத்தில், சரக்குக் கப்பல் மோதி பாலமே இடிந்து விழுந்த சம்பவத்தில், அறுவரைக் காணவில்லை.

ஆற்று நீரின் குளிர் நிலை மற்றும் அவர்கள் விழுந்து பல மணி நேரங்கள் கடந்திருப்பதை வைத்துப் பார்க்கும் போது, கட்டுமானத் தொழிலாளிகளான அந்த 6 பேரும் உயிருடன் மீட்கப்படும் வாய்ப்பு குறைவே என Maryland போலீஸ் கூறியது.

இவ்வேளையில் மீட்புப் படையினர் இருவரைக் காப்பாற்றி மேலே கொண்டு வந்துள்ளனர்; அவர்களில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அந்த 8 பேரும், சம்பவத்தின் போது பாலத்தின் சாலை மேற்பரப்பில் குழிகளை அடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதனிடையே சரக்குக் கப்பலில் இருந்த அனைத்து 22 பணியாளர்களும் இந்திய பிரஜைகள் என்றும் அவர்கள் காயமேதுமின்றி தப்பியதாகவும் உறுதிபடுத்தப்பட்டது.

கப்பல் பாலத்தை மோதியதில் எண்ணெய் கசிவு உள்ளிட்ட தூய்மைக் கேட்டு பிரச்னைகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

அச்சம்பவம் குறித்த விசாரணைக்கு அமெரிக்காவுடன் ஒத்துழைக்கத் தயார் என சிங்கப்பூர் கடல் மற்றும் துறைமுக அதிகார தரப்பு கூறியுள்ளது.

முன்னதாக சிங்கப்பூர் கொடியுடன் வந்த அந்த சரக்குக் கப்பல் மோதியதில், 2.7 கிலோ மீட்டர் நீளமுள்ள பாலத்தின் பெரும் பகுதி இடிந்து ஆற்றில் விழுந்தது.

இதனால் பாலத்தில் சென்றுக் கொண்டிருந்த டிரேய்லர் உட்பட பல வாகனங்களும், பாலத்தோடு சேர்ந்து நீரில் விழுந்தன.

விழுந்த வாகனங்களில் குறைந்தது 20 பேர் இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

மீட்புப் பணிகள் நாட்கணக்கில் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த எதிர்பாரா விபத்தை அடுத்து Maryland கவர்னர் அங்கு அவசர நிலையை அறிவித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!