கோலாலம்பூர், ஏப்ரல் 25 – அண்மையில், மலாயா பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய போது, புரூஸ் கில்லி எனும் அமெரிக்க கல்வியாளர் ஒருவர் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில், அந்த பல்கலைக்கழக நிர்வாகம் வெளிப்படையாக மன்னிப்புக் கோரியுள்ளது.
போர்ட்லேண்ட் ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியரான புரூஸ் கில்லி தனது உரையில், மலேசியா “யூத மக்களுக்கு எதிரான இரண்டாவது படுகொலைக்கு” அழுத்தம் கொடுப்பதாக குற்றம்சாட்டி இருந்தார்.
அதோடு, அனைத்துலக விவகாரங்களில் மலேசியாவால் தீவிரமாக பங்கேற்க முடியாது எனவும், நிச்சயமாக அமெரிக்காவின் நண்பராகவோ அல்லது பங்காளியாகவோ மலேசியாவால் செயல்பட முடியாது எனவும், தனது X சமூக ஊடக பதிவின் வாயிலாகவும் கில்லி குறிப்பிட்டிருந்தது பெரும் சர்ச்சையையும், கண்டனத்தையும் பெற்றுள்ளது.
பொது உணர்வை புறக்கணிக்கும் வகையில் அமைந்துள்ள கில்லியின் அறிக்கைக்கு வருத்தம் தெரிவித்த மலாயா பல்கலைக்கழகம், அதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருப்பது உறுதிச் செய்யப்படுமென, ஓர் அறிக்கையின் வாயிலாக கூறியுள்ளது.
மலேசியாவிற்கு பயணம் செய்பவர்களின் பாதுகாப்பு குறித்த கில்லியின் கூற்றை கண்டித்துள்ளதோடு, அது ஒரு பொறுப்பற்ற மற்றும் தீவிரமான குற்றச்சாட்டு எனவும், மலேசியர்களின் சீற்றத்தை அது தூண்டியுள்ளது எனவும் மலாயா பல்கலைக்கழகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அதனை ஒரு கடுமையான விவகாரமாக கருத்தும் மலாயா பல்கலைக்கழகம், சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் உத்தரவாதம் அளித்துள்ளது.
உயர்கல்வி அமைச்சர் ஜாம்ப்ரி அப்துல் காடிரின் உத்தரவுக்கு இணங்க, கில்லி சம்பந்தப்பட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் செயல்பாடுகளையும் ரத்து செய்துள்ளதாகவும் மலாயா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
முன்னதாக, கில்லியின் சமூக ஊடக பதிவை பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டிருந்த வேளை ; முன்னாள் வெளியுறவு அமைச்சர் சைபுடின் அப்துல்லா உட்பட அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.