
மறைந்த கவிஞர் நா. முத்துக்குமாருக்கு சமர்ப்பணம் செய்யும் வகையில் ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ எனும் இன்னிசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்றைய இளைஞர்களுக்கு இலக்கியத்தின் மீது நாட்டத்தையும் ஈர்ப்பையும் ஏற்படுத்துவதே அந்நிகழ்ச்சியின் தலையாய நோக்கமாகும். 2000 ஆம் ஆண்டு தொடங்கி இறக்கும் வரை கவிஞர் நா. முத்துக்குமார் எண்ணற்ற கவிதைகளையும் தமிழ்த் திரையிசைப் பாடல்களையும் தமிழ் இலக்கிய உலகிற்கு வழங்கிச் சென்றுள்ளார்.
அவரை நினைவுகூரும் அதே வேளை, இன்னிசை மூலம் கவிதை இலக்கியத்தை இளைஞர்களுக்குக் கொண்டுச் சேர்ப்பது, கவிதைப் படைக்கும் ஆர்வத்தைத் தூண்டுவது, இடைநிலைப் பள்ளிகளில் மாணவர்கள் தமிழ் இலக்கியத்தைப் பாடமாக எடுக்க ஊக்குவிப்பது உள்ளிட்ட அம்சங்களை எடுத்துரைக்க இந்த இன்னிசை நிகழ்ச்சி பேருதவியாக இருக்கும் என ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இன்றைய இளைஞர்கள் மத்தியில் இலக்கியம் சரியான முறையில் கொண்டு சேர்க்கப்படவில்லை என்ற ஆதங்கள் இருக்கிறது. அவ்வகையில் இத்தகைய நிகழ்ச்சியில் நிச்சயம் மிகப் பெரிய இலக்கியப் புரட்சியை ஏற்படுத்தும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் நா. முத்துக்குமாரின் நினைவலைகளையும் பாடல் வரிகளையும். ருசிகரமான தகவல்களையும் திரையிசைக் கவிஞர் சினேகன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறார். தமிழுக்குத் தொண்டாற்றி வரும் Datuk Seri Dr M. சரவணன் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கவிருக்கிறார்.
இந்நிகழ்ச்சி செப்டம்பர் 12 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு சிலாங்கூர், Batu Cavesசில் உள்ள Shenga Convention Hallலில் நடைபெறுகிறது. நுழைவுக் கட்டணம் 100 ரிங்கிட். இணையம் வழி டிக்கெட் வாங்கலாம். இடைநிலைப் பள்ளிகளில் இலக்கியப் பாடம் எடுக்கும் மாணவர்களை ஊக்குவிக்க குறிப்பிட எண்ணிக்கையில் இலவச டிக்கெட்டும் வழங்கப்படுகிறது. டிக்கெட் குறித்த மேல் விவரங்களைத் தெரிந்து கொள்ள 011-6146 1866 என்ற எண்ணில் திருமதி மாலாவைத் தொடர்பு கொள்ளலாம்.



