
லாஸ் ஏஞ்சல்ஸ், ஆகஸ்ட்.28-Transformers திரைப்படத் தொடரில் Optimus Prime என்ற கதாபாத்திரத்திற்குத் குரல் கொடுத்ததன் வழி மிகவும் பிரபலமான, புகழ்பெற்ற பின்னணிக் குரல் கலைஞர் Peter Cullen தமது 85-வது வயதில் காலமானார்.
லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தமது இல்லத்தில், குடும்பத்தினர் சூழ்ந்திருக்க கடந்த புதன்கிழமை அவர் அமைதியான முறையில் காலமானதாகத் தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும், அவரது மறைவுக்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை.
Cullenனின் அசாதாரண பாரம்பரியத்தைக் கௌரவிக்கும் வகையில், பொதுமக்கள் தங்கள் சமூகங்களுக்குச் சேவை செய்ய வேண்டும். கருணை, நேர்மை மற்றும் விசுவாசத்துடன் வழிநடத்த வேண்டும்.
அதே சமயம், ‘மென்மையாக இருக்கப் போதுமான வலிமையுடன் இருங்கள்’ என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். Cullen, தமக்கு நெருங்கியவர்கள் மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள நண்பர்கள் மற்றும் மில்லியன் கணக்கான ரசிகர்களாலும் நினைவுகூரப்படுவார் என அவரது குடும்பத்தினர் அறிக்கை வழி தெரிவித்துள்ளதாக TMZ தகவல் வெளியிட்டுள்ளது.
Cullen முதன் முதலில் 1980-களில் வெளியான Transformers அனிமேஷன் தொடரில் Autobotsகளின் தலைவரான Optimus Prime கதாபாத்திரத்திற்குக் குரல் கொடுத்தார்.
பின்னர் அவர், Michael Bay யின் லைவ்-ஆக்சன் திரைப்படத் தொடரிலும் அதே பாத்திரத்தில் நடித்தார்.
2023-ல் வெளியான Transformers: Rise of the Beasts உட்பட பல்வேறு அனிமேஷன் தொடர்கள், வீடியோ கேம்கள் மற்றும் அதன் தொடர்ச்சிகளிலும் அவர் தொடர்ந்து அந்தக் கதாபாத்திரத்திற்குக் குரல் கொடுத்து வந்தார்.
நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக, கல்லனின் ஆழமான, கம்பீரமான குரல் Optimus Prime முடன் ஒன்றிப் போனது. அக்கதாபாத்திரத்தைத் தாண்டி, வேறு சில பிரபலமான படைப்புகளிலும் அவர் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.
பின்னணிக் குரல் துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்புக்காக, 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற Children’s & Family Emmy விருது விழாவில் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



