
பிரான்ஸ், அக்டோபர் 13 – பிரான்ஸில் (France) இணையத் தாக்குதலால் நூற்றுக்கணக்கான பல்பொருள் அங்காடிகளின் குளிர்சாதனப் பெட்டிகள் பாதிக்கப்பட்டன. இதனால் உணவுப் பொருட்கள் கெட்டுப்போனதுடன், சில கடைகளில் தீ விபத்துகளும் ஏற்பட்டன.
இந்தச் சம்பவத்தில் 400க்கும் மேற்பட்ட கடைகள் பாதிக்கப்பட்டுள்ளன. குளிர்சாதனப் பெட்டிகளின் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்ததால், குளிரூட்டப்பட்ட மற்றும் உறையவைக்கப்பட்ட உணவுகளைத் தூக்கி எறிய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் பல கோடி யூரோ இழப்பு ஏற்படலாமெனக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு பிரான்ஸ் பிரதமர் செபாஸ்தியன் லெகோர்னு (Sébastien Lecornu) உத்தரவிட்டுள்ளார். பழைய மென்பொருள்களில் உள்ள பாதுகாப்புக் குறைபாடுகளைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் இதுபோன்ற தாக்குதல்கள் நடந்துள்ளனவா என விசாரணை நடைபெற்று வருகிறது.



