Latestமலேசியா

இந்தியாவில், கைதுச் செய்யப்பட்ட போதைப் பொருள் கடத்தல் மன்னனின் முதலாளி ஒரு மலேசியரா? ; போலீஸ் விசாரணை

கோலாலம்பூர், மார்ச் 12 – இந்தியாவில் கைதுச் செய்யப்பட்ட போதைப் பொருள் கடத்தல் மன்னனின் முதலாளி மலேசியர் என அந்நாட்டின் மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் முன் வைத்துள்ள குற்றச்சாட்டை போலீஸ் ஆராய்கிறது.

அது தொடர்பில், இந்திய அதிகாரிகளிடமிருந்து மேல் விவரங்களை பெறும் முயற்சியில், அரச மலேசிய போலீஸ் படை ஈடுபட்டுள்ளது.

இந்தியாவில், போதைப் பொருள் கடத்தல் மன்னனாக செயல்பட்டு கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்ட ஜாஃபர் சாதிக்கின் முதலாளி மலேசியர் எனும் தகவல் தொடர்பில் அரச மலேசிய போலீஸ் படை இன்னும் எந்த ஒரு தகவலையும் பெறவில்லை.

இந்தியாவின் முன்னாள் போலீஸ் அதிகாரியும், செய்தி நிறுவனம் ஒன்றின் உரிமையாளருமான எ.சங்கர் என்பவர் யூடியூப்பிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் அந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

எனினும், இந்திய போதைப் பொருள் கடத்தல் மன்னன் என அழைக்கப்படும் அந்நபர், மலேசியாவில், போதைப் பொருள் தொடர்பான எந்த ஒரு குற்றச் செயல் பட்டியலில் இதுவரை இடம் பெறவில்லை என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக, தேசியப் போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ ரஸாருடின் ஹுசைன் தெரிவித்தார்.

அதனால், அந்நபர் குறித்து மேல் விவரங்களை அறிய, அரச மலேசிய போலீஸ் படை, இந்திய போலீசாருடன் ஒத்துழைப்பை மேற்கொண்டுள்ளதாக ரஸாருடின் சொன்னார்.

முன்னதாக, இந்தியாவில் போதைப் பொருள் கடத்தல் மன்னனாக திகழ்ந்தவரின் முதலாளி மலேசியர் எனவும் அந்நபர் தமிழ் திரையுலக பிரபலங்கள் மற்றும் திரைப்பட விநியோகஸ்தர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பவர் எனவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. எனினும், சம்பந்தப்பட்ட நபர் யார் என்ற விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.

130 கோடி ரிங்கிட் மதிப்புள்ள அனைத்துலக போதைப் பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த தமிழ்ப் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாடிக் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, ஜபாரின் முதலாளி மலேசியாவை சேர்ந்தவர் என இந்தியாவின் மூத்த பத்திரிக்கையாளரான சங்கர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!