Latestமலேசியா

இந்திய சிறுமிகள் முதல் முதியவர்கள் வரை புகைப்படங்களை ஆபாசமாக மாற்றி மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்

கோலாலாம்பூர்,AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, டிக் டோக்கில் பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாகச் சித்தரித்து மிரட்டி பணம் பறிக்கும் கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி மாணவிகள், குடும்பப் பெண்கள் முதல் முதியவர்கள் வரை அனைத்துத் தரப்பினரும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை அடையாளம் காணப்பட்ட 4 டிக் டோக் கணக்குகள் மூலம், சாதாரணப் படங்களை ஆபாசமாக மாற்றி, அருவருக்கத்தக்கக் கருத்துகளுடன் பதிவிட்டு வருவதாக, பாதிக்கப்பட்டவர்கள் வணக்கம் மலேசியாவைத் தொடர்புகொண்டு கூறினர்.

சம்பந்தப்பட்ட பக்கங்களில் இருந்து வரும் DM குறுஞ்செய்திகளில், 200 முதல் 300 ரிங்கிட் வரை Touch ‘n Go மூலம் அனுப்ப வேண்டும் என்றும், தவறினால் மேலும் ஆபாசப் படங்களை வெளியிடுவோம் என்றும் மிரட்டுகின்றனர்.

இந்த மிரட்டலுக்குப் பயப்படாதவர்களின் குடும்பத்தினரின் ஆண்கள் படங்களும் ஆபாசமாக மாற்றப்பட்டுப் பதிவேற்றப்படுகின்றன.

மேலும், இந்தப் பக்கங்கள் குறித்து புகார் அளிப்பவர்களையும் குறிவைத்து அவர்களின் படங்களை வெளியிடப்படுகின்றன.

கேட்ட பணத்தைத் தரா விட்டால், இவ்வளவு நாள் உள்ளாடைகளுடன் வெளியிட்ட படங்களை இனி நிர்வாணமாக மாற்றி வெளியிடப்போவதாகவும் மிரட்டுவதாக, பினாங்கிலிருந்து பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் கூறியுள்ளார்.

Voice note

இதுவரை ஒரு பக்கத்தில் மட்டும் தலா 30-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிலர் தற்கொலை முயற்சி வரை சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

போலீஸிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடகம் ஆணையமான MCMC நடவடிக்கை எடுக்க 15 நாட்கள் வரை ஆகும் எனக் கூறியுள்ளது.

‘சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் டிக் டோக் கணக்குகளை முடக்கும் அதன் நிர்வாகம், இவ்வளவு பெரிய பிரச்னைக்கு உடனடி நடவடிக்கை எடுக்காதது ஏன்?’ எனப் பாதிக்கப்பட்டவர்கள் வேதனையுடன் கேள்வி எழுப்புகின்றனர்.

உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், மேலும் ஏராளமான பெண்கள் பாதிக்கப்படலாமென அவர்கள் பெரும் கவலைத் தெரிவித்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!