
ஜகார்த்தா, அக்டோபர்-9,
இந்தோனேசியாவில் பல மாதங்களாகத் தொடரும் காட்டுத் தீ மற்றும் நிலப்பரப்புத் தீ சம்பவங்களால், அந்நாட்டு அரசாங்கத்திற்கு எதிராக மக்களின் அதிருப்தி அதிகரித்துள்ளது.
சுமத்ரா தீவிலுள்ள ஜாம்பி மாநிலத்தில், காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, நூற்றுக்கணக்கான மாணவர்களும் பொது மக்களும் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மேற்கு களிமந்தானில் காட்டுத் தீயைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் தவறியதாகக் குற்றஞ்சாட்டி, அதிபர் பிராபோவோ சுபியாந்தோ உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராகக் கூட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அவ்வழக்கின் முதல் விசாரணையில் அரசாங்கப் பிரதிநிதிகள் முன்னிலையாகாததால், விசாரணை அக்டோபர் 21-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள இந்தக் காட்டுத் தீயால் உருவான புகைமூட்டம் மலேசியா மற்றும் சிங்கப்பூரையும் பெரிதும் பாதித்துள்ளது.
மலேசியாவில் ஜோகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான், சிலாங்கூர் உள்ளிட்ட மாநிலங்களிலும், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவிலும் நேற்று பள்ளிகள் மூடப்பட்டன.
இந்நிலையில், புகைமூட்டப் பிரச்சனை தொடர்பாக இந்தோனேசிய அதிபர் பிரபோவோவைத் தாம் நேரடியாகத் தொடர்புகொண்டதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
புகைமூட்டத்தைக் கட்டுப்படுத்த ஆசியான் நாடுகளின் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் கூட்டத்தை ஏற்பாடு செய்யவும் மலேசியா நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தோனேசியாவில் வியாழக்கிழமை இரவு நிலவரப்படி, தீப்பரவக் கூடிய 387 வெப்பப் புள்ளிகள் அடையாளம் காணப்பட்டன.
இது முந்தைய நாளைவிட 67 விழுக்காடு குறைவாகும்.
என்றாலும், நீடிக்கும் வறண்ட வானிலையால் காட்டுத் தீ மீண்டும் பரவும் அபாயம் இருப்பதாக அந்நாட்டு வானிலை ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.
புகைமூட்டப் பிரச்னையில் இந்தோனீசியாவைக் கண்டித்து, சமூக வலைத்தளங்களில் குறிப்பாக மலேசிய-சிங்கப்பூர் மக்கள் பல்வேறு மீம்ஸ் துணுக்குகளையும் கருத்துக்களையும் பதிவிட்டு வருவதையும் காண முடிகிறது.



