
ஜகார்த்தா, மே-8-இந்தோனேசியாவின் Halmahera தீவில் உள்ள Dukono எரிமலை இன்று காலை திடீரென வெடித்ததில், அங்கு சென்ற 20 சுற்றுப் பயணிகள் காணாமல் போயுள்ளனர்.
இன்று காலை 7.41 மணியளவில் இந்த எரிமலை வெடித்துச் சிதறியது.
இதிலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் உயரத்திற்கு கரும்புகை மற்றும் சாம்பல் வெளியேறி வானத்தை மூடியது.
இதனால் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த 20 பேர் அங்கு சிக்கிக் கொண்டுள்ளனர்.
காணாமல் போனவர்களில் 9 பேர் சிங்கப்பூரியர்கள் என்றும், மீதமுள்ள 11 பேர் இந்தோனேசியர்கள் என்றும் அந்நாட்டு மீட்புப் படை தெரிவித்தது.
அவர்களைத் தேடும் பணியில் காவல்துறை மற்றும் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தற்போது எரிமலையைச் சுற்றி 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு பொது மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மழை பெய்தால் எரிமலைக் குழம்பு வழிந்தோடும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.



