
கோலாலம்பூர், அக்டோபர்-16,
வன்முறை உள்ளிட்ட கலாச்சாரங்களால் இன்றைய இளையத் தலைமுறை கெட்டு சீரழிவது ஏன் என, Dinamik Sinar Kasih சமூக நலச் சங்கத்தின் நிறுவனரும் தலைவருமான டத்தோ என். சிவகுமார் வேதனையுடன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெட்டாலிங் ஜெயாவில் பள்ளி வளாகத்தில் மாணவி குத்திக் கொலைச் செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இக்கொடூரச் சம்பவம் மலேசியப் பள்ளிகளில் வன்முறை கலாச்சார அச்சத்தை மீண்டும் எழுப்பியுள்ளது.
குறிப்பாக பள்ளிகளில் ஒழுக்கம் மற்றும் பாதுகாப்பு மீதான கவனத்தை மீண்டும் திருப்ப வேண்டிய அவசியத்தை சிவகுமார் வலியுறுத்தினார்.
இன்றைய இளைஞர்கள் சமூக ஊடகங்களில் பரவும் தீய உள்ளடக்கங்களால் பாதிக்கப்படுகிறார்களா அல்லது வீட்டிலும் பள்ளியிலும் ஒழுக்கக் கட்டுப்பாடு குறைவாக உள்ளதா என்பது முக்கிய கேள்வி என அவர் சொன்னார்.
எனவே, நீண்ட காலத் தீர்வாக சில கடுமையான நடவடிக்கைகளை அவர் பரிந்துரைத்தார்.
கடுமையான நடத்தைகளுக்கு பிரம்பால் அடிக்கும் தண்டனை, முறையற்ற பொருட்கள் பள்ளி வளாகத்தினுள் கொண்டு வரப்படுவதைத் தடுக்க திடீர் சோதனைகள், மற்றும் கட்டொழுங்கு ஆசிரியர்களுக்கு முழு அதிகாரம் வழங்குதல் உள்ளிட்டவை அவற்றிடங்கும்.
மேலும், பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளின் இணைய நடவடிக்கைகளையும் செயல்பாடுகளையும் மேலும் அணுக்கமாகக் கண்காணிக்க வேண்டும்.
மரியாதையும் ஒழுக்கமும் வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும் என்றும் சிவகுமார் வலியுறுத்தினார்.
இத்துயரச் சம்பவம், கல்வி என்பது வெறும் படிப்பை மட்டுமல்ல – மாறாக மனிதநேயம், ஒழுக்கம் மற்றும் பொறுப்புணர்வை வளர்ப்பதையும் உட்படுத்தியுள்ளது என்ற முக்கியச் செய்தியை நினைவூட்டுவதோடு, நமக்கு கடும் எச்சரிக்கையாகவும் அமைந்துள்ளதாக சிவகுமார் கூறினார்.