
டாமான்சாரா, மே-28-உணவு அனுப்பும் பணியாளர் மீது சூடான சூப்பை வீசி எறிந்ததாகக் கூறப்படும் புகாரைத் தொடர்ந்து, FamilyMart நிறுவனம் தனது ஊழியர் ஒருவரை உடனடியாகப் பணி இடைநீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, அந்த பெண் ஊழியர் ஆத்திரத்தில் சூப்பை வீசி எறியும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கோத்தா டாமான்சாரா, The Core வளாகத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள FamilyMart நிர்வாகம், நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தது.
மேலும், இதுபோன்ற ஒழுங்கீனமான மற்றும் வன்முறை சார்ந்த நடத்தைகளைத் தங்கள் நிறுவனம் ஒருபோதும் சகித்துக் கொள்ளாது என்றும், சம்பந்தப்பட்ட ஊழியர் தற்காலிகமாகப் பணி நீக்கம் செய்யப்பட்டு தீவிர உள்விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.



