Latestஉலகம்

உயர்ந்த சாதனை! தடைகளைத் தகர்த்தெறிந்த உலகின் மிக குள்ளமான மருத்துவர் கணேஷ் பாரையா

குஜராத், மார்ச் 17 – இந்தியா, குஜராத்தில் வெறும் 3 அடி அல்லது 91 சென்டி மீட்டர் உயரமே கொண்ட இளைஞர், சாதிக்க உயரம் ஒரு தடையல்ல என்பதை நிரூபித்திருக்கிறார்.

உலகின் மிகக் குள்ளமான மருத்துவராக பெயர் பதித்துள்ள 23 வயது கணேஷ் பாரையா என்பவரே அச்சாதனைக்குச் சொந்தக்காரர்.

பிறக்கும் போது மற்ற குழந்தைகள் போலவே ஆரோக்கியமாக கணேஷ் பிறந்துள்ளார்; எனினும் வளர வளர அவருக்கு dwarfism அல்லது குள்ளத்தன்மை பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டது.

உடம்பு சிறியதாகவும் தலை மட்டும் பெரியதாகவும் இருந்ததால் பள்ளிக் காலம் முதற்கொண்டே நண்பர்களின் கேலி கிண்டல்களுக்கு கணேஷ் ஆளாகி வந்துள்ளார்.

என்றாலும், மனமுடையாமல் நன்குப் படித்து தேர்ச்சிப் பெற்றார்; தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்றிருந்தும், கணேஷுக்கு மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சையில் இளங்கலைப் பட்டப்படிப்பு வாய்ப்பு நிராகரிக்கப்பட்டது.

குள்ளமாக இருப்பதால், அவசர சிகிச்சைகளைப் பார்க்க முடியாது என்ற காரணத்தை முன் வைத்து, இந்திய மருத்துவ மன்றம் கணேஷுக்கு அவ்வாய்ப்பை மறுத்தது.

எனினும் மனம் தளராத கணேஷ் 2018-ஆம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்றத்தை நாடி தன் பக்க நியாயத்தை முன் வைத்தார்.

அவரின் வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ள, கணேஷ் MBBS பட்டப்படிப்பை மேற்கொண்டு அதனை வெற்றிகரமாக நிறைவுச் செய்தார்.

தற்போது குஜராத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவராக சேர்ந்து வைத்தியம் பார்த்து வருகிறார் கணேஷ்.

தோற்றத்தில் 4 வயது சிறுவன் போல இருப்பதால், ஒரு கட்டத்தில், சர்கஸ் கோமாளியாகச் சென்று விடுமாறு சொந்த தந்தையாலே கூறப்பட்ட கணேஷ், இன்று மருத்துவராகியிருப்பதன் மூலம் மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்பதை நிரூபித்துள்ளார்

“நான் ஏழை மக்களுக்கு சிகிச்சை அளிக்க விரும்புகிறேன்; உயரத்தைக் காட்டி ஒருவரின் திறமையை மதிப்பிட முடியாது என்பதற்கு நானே உதாரணம்” என பெருமையுடன் கூறுகிறார் மருத்துவர் கணேஷ்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!