
ஜகார்த்தா, ஜூலை-9-தமக்கு இந்திய வம்சாவளி மரபணு (DNA) இருப்பதாக வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ளார் இந்தோனேசிய அதிபர் பிராபோவோ சுபியாந்தோ.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரத்துவப் பயணத்தின் போது ஜகார்த்தாவில் இந்திய வம்சாவளியினருடனான சந்திப்பில் அவர் அவ்வாறு கூறினார்.
இதனை ஏற்கனவே இந்தியாவுக்குச் சென்றிருந்த போது, அதிபர் மாளிகையில் நடைபெற்ற விருந்தில் பிராபோவோ கூறியிருந்த நிலையில், தற்போது சொந்த மண்ணில் கூறி கவனத்தை ஈர்த்துள்ளார்.
அவரின் இப்பேச்சு அரங்கில் பெருந்திரளாக இருந்த இந்திய வம்சாவளி மக்களின் கரவொலியைப் பெற்றது.
இது, இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான இரத்த உறவை உலகிற்கு உணர்த்தியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்தோனேசியா மீதான இந்திய நாகரீகத்தின் பெரும் தாக்கம் குறித்தும் பெருமிதம் தெரிவித்தார்.
குறிப்பாக, இந்தோனேசிய மொழியின் வேர்களைப் பற்றிப் பேசிய பிராபோவோ, இந்தோனேசிய மொழியில் உள்ள சொற்களில் சுமார் 50 விழுக்காடு சமஸ்கிருத மொழியிலிருந்து வந்தவை என்பதைச் சுட்டிக் காட்டினார்.
மொழி மற்றும் கலாச்சார ரீதியாக இரு நாடுகளும் எவ்வளவு நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளன என்பதை இது தெளிவுபடுத்துகிறது.
அதுமட்டுமின்றி, இந்தியாவின் குறிப்பாக மோடி அரசாங்கத்தின் கொள்கைகளை மிகுந்த மரியாதையுடன் கவனித்து வரும் அவர், இந்தியாவை ஒரு சிறந்த முன்மாதிரியாகக் கொண்டு, தமக்கு உகந்த இந்தியக் கொள்கைகளை இந்தோனேசியாவின் வளர்ச்சிக்குத் தழுவிச் செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட நெடிய ஒத்துழைப்பு, வரும் காலங்களில் மேலும் வலுப்பெறும் என்பதற்கான ஒரு முக்கிய மைல்கல்லாக இந்த மோடியின் இந்த ஜகார்த்தா பயணம் அமைந்துள்ளது.



