Latestமலேசியா

எஸ்.பி.எம் தேர்வில் சிறந்த தேர்ச்சிபெற்ற இந்திய மாணவர்களுக்கு மெட்ரிகுலேசனில் கூடுதல் வாய்ப்பு வழங்குவீர்- செனட்டர் லிங்கேஸ்வரன்

கோலாலம்பூர், மே 27 – எஸ்.பி.எம் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்ற குறிப்பாக நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் பெற்ற இந்திய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்காமல் மெட்ரிகுலேசனில் கூடுதல் வாய்ப்புக்களை அரசாங்கம் வழங்க வேண்டும் என செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் அதிக மதிப்பெண்கள் பெறும் இந்திய மாணவர்கள் மெட்ரிகுலேஷன் கல்லூரிகளில் இடம் மறுக்கப்படுவதால் ஏற்படும் மனவேதனையைத் தவிர்க்குமாறு அதிகாரிகளை அவர் வலியுறுத்தினார். ஒவ்வொரு முறை அரசாங்கம் மெட்ரிகுலேஷன் கல்வி திட்டத்திற்கான விண்ணப்பங்களின் முடிவுகளை வெளியிடும்போது ​​சிறந்த தேர்ச்சி பெறும் மாணவர்களும் அவர்களது குடும்பத்தினரும் ஏமாற்றமும் கவலையும் அனுபவிப்பது வேதனை அளிப்பதாகலிங்கேஸ்வரன் கூறினார்.

மெட்ரிகுலேஷன் அல்லது உபகாரச் சம்பளத்திற்கு தகுதி பெறும் வரை எவரும் எந்த கல்வி வாய்ப்பையும் இழக்கக்கூடாது. நீண்ட காலமாகவே இருந்துவரும் இந்த போக்கிற்கு இம்முறையாவது ஒற்றுமை அரசாங்கம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தாம் நம்புவதாக அவர் தெரிவித்தார்.

இனத்தின் அடிப்படையில் யாருடைய இடத்தையும் பறிக்காதீர்கள். முன்னேறும் நாட்டை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம். ஏழ்மை நிலையிலுள்ள மாணவர்கள் மெட்ரிகுலேஷன் வாய்ப்பை பெற்று உள்ளூர் பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடர்ந்தால், உயர்கல்வியை முடித்தவுடன் , சமூகத்தை மாற்றக்கூடிய ஒரு நல்ல வேலையை அவர்கள் பெற முடியும்.

2018ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டுவரை மெட்ரிகுலேஷன் கல்வி திட்டத்தில் 30,000 வாய்ப்புகள் வழங்கப்பட்டன. இதன்படி சராசரி 5 ஆண்டுகளில் இந்திய மாணவர்களுக்கு சுமார் 1,116 இடங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் டாக்டர் லிங்கேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!