
புத்ராஜெயா, ஜூன்-2-வெறும் நெறிமுறைகள் அல்லது ஒழுக்கக் காரணங்களை மட்டும் முன்வைத்து, மாநிலத்தில் இயங்கி வரும் லாட்டரி மற்றும் பந்தயச் சூதாட்ட மையங்களுக்கு ஒட்டுமொத்தமாகத் தடை விதிக்கும் அதிகாரம் கெடா மாநில அரசுக்குக் கிடையாது என, புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.
மாநிலத்தில் உள்ள 4 இலக்க எண்கள் கணிப்பு மற்றும் லாட்டரி நிலையங்களின் வணிக உரிமங்களைப் புதுப்பிக்க மறுத்த கெடா மாநில அரசின் கொள்கை முடிவை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், கடந்த வாரம் வெளியான தீர்ப்பின் விரிவான காரணங்களை நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.
2-க்கு 1 என்ற பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பின்படி, சூதாட்டம் மற்றும் பந்தயங்களை ஒழுங்குபடுத்துவது என்பது மத்திய அரசாங்கத்தின் பிரத்தியேக அதிகார வரம்புக்கு உட்பட்டதாகும்.
ஊராட்சி மன்றங்கள், ஒரு கட்டடத்தின் பாதுகாப்பு குறைபாடுகள், சுகாதாரம் அல்லது பொது மக்களுக்கு ஏற்படும் இடையூறுகள் போன்ற வளாகம் சார்ந்த காரணங்களுக்காக மட்டுமே உரிமங்களை மறுக்க முடியும் என்றும், மாறாகச் சூதாட்டத்திற்கு எதிரான கொள்கை நிலைப்பாட்டைக் காட்டி தன்னிச்சையாகத் தடை விதிக்க முடியாது என்றும் நீதிபதி Faizah Jamaludin தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.
அரசின் இந்த முடிவை எதிர்த்துப் பாதிக்கப்பட்ட சில வணிக நிறுவனங்கள் கடந்த 38 ஆண்டுகளாக அதே வளாகத்தில் இயங்கி வந்ததும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த அதிரடித்தீர்ப்பை எதிர்த்து, கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான கெடா மாநில அரசின் மனு மீதான விசாரணை வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது.



