Latestமலேசியா

கடற்படையின் தேசிய ‘ஹைட்ரோகிராபிக்’ மையத்தில் அத்துமீறி நுழைய முற்பட்ட 4 ஆடவர்கள் கைது

கோலாலம்பூர், மே 29 – சிலாங்கூர், கிள்ளான் துறைமுகத்திலுள்ள, கடற்படையின் “ஹைட்ரோகிராபிக்” எனும் தேசிய நீராய்வியல் மையத்தில், அத்துமீறி நுழைய முறபட்ட நான்கு ஆடவர்கள் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.

அந்த மையத்தின் பிரதான நுழைவாயிலில் அத்துமீறி நுழைந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டது குறித்து, சம்பவத்தின் போது அங்கு பணியில் இருந்த அதிகாரி ஒருவர் போலீசாருக்கு தகவல் வழங்கியதாக, தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் சுப்ரிடெண்டன் சா ஹூங் போங் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு அருகில் ரோந்து பணியில் இருந்த போலீஸ் அதிகாரிகள் அம்மையத்திற்கு மேல் நடவடிக்கைக்காக விரைந்தனர்.

தேசிய ஹைட்ரோகிராபிக் மையத்தின் நுழைவாயிலில் பணியில் இருந்த அதன் அதிகாரிகள் சிலர், நுழைவாயிலுக்கு எதிரே சாலையில் வெளிநாட்டவர்கள் என நம்பப்படும் நான்கு ஆடவர்கள் சுற்றித்திரிவதைக் கண்டது தொடக்க கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதன் பின்னர், நுழைவாயிலுக்கு அருகில் சென்ற அவர்கள் புகைப்படம் எடுப்பதை போல பாவனை செய்துள்ளனர். அதனால், அவர்கள் உடனடியாக கைதுச் செய்யப்பட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக, ஹூங் சொன்னார்.

கைதுச் செய்யப்பட்டவர்கள் அனைவரும் 21 வயதுக்கும் 36 வயதுக்கும் இடைப்பட்ட அந்நிய நாட்டவர்கள் ஆவர்.

அவர்களுக்கு எதிராக பழைய குற்றப்பதிவுகள் எதுவும் இல்லை என்பதும், தொடக்க கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அத்துமீறல் குற்றத்திற்காக அவர்கள் விசாரிக்கப்படுகின்றனர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஆறு மாதம் வரையிலான சிறை அல்லது மூவாயிரம் ரிங்கிட் வரையிலான அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

விசாரணைக்காக மூன்று நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அவர்களுக்கு எதிராக, குடிநுழைவுத் துறை சட்டத்தின் கீழும் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!