Latestமலேசியா

கடவுள் வாழ்த்து, தமிழ் வாழ்த்து பாடலுக்கு தடை விதித்தோர் மன்னிப்பு கேட்க வேண்டும்; பத்து எம்.பி பிரபாகரன் வலியுறுத்து

கோலாலம்பூர், நவ 27 – பினாங்கு கெப்பளா பத்தாஸில் நடைபெற்ற செந்தமிழ் விழாவில் நடைபெற்ற தமிழ் மொழி விழாவில் கடவுள் வாழ்த்து மற்றும் தமிழ் வாழ்த்து பாடுவதற்கு தடை விதிக்கப்பட்டதற்கு பொறுப்பானவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டுமென பத்து நாடாளுமன்ற தொகுதிக்கான பி.கே.ஆர் நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் கோரிக்கை விடுத்துள்ளார். கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் கடவுள் வாழ்த்து மற்றும் தமிழ் வாழ்த்து இடம் பெறக்கூடாது என்று விதிக்கப்பட்ட தடையினால் ஒட்டு மொத்த இந்திய சமூகம் வேதனைக்கு உள்ளாகியிருப்பதாக அவர் கூறினார். பொதுவாக தமிழ் பள்ளிகளில் நடைபெறும் நிழ்ச்சிகளில் கடவுள் வாழ்த்தும் தமிழ் வாழ்த்தும் இடம்பெறுவது பாரம்பரிய மரபுகளில் ஒன்றாக இருந்த வருவதை பிரபாகரன் சுட்டிக்காட்டினார்.

கடவுள் வாழ்த்தும் தமிழ் வாழ்த்தும் சமயம் சம்பந்தப்பட்ட ஒன்றாக உள்ளது. இதில் கல்வி அமைச்சு சம்பந்தப்பட வேண்டிய அவசியம் என்ன என்றும் அவர் வினவினார். எனவே இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் இந்திய சமூகத்தினரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான விநியோக மசோதா மீதான விவாதத்தில் கலந்துகொண்டபோது பிரபாகரன் தெரிவித்தார். அதோடு அந்த நிகழ்ச்சியில் திருவள்ளுவரின் உருவப்படம் அறிவிப்பு பதாகையில் இடம்பெறுவதை நிராகரித்த சம்பவமும் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று என பிரபாகரன் தெரிவித்தார். இதற்கான காரணத்தையும் தாம் அறிந்துகொள்ள விரும்புவதாக பிரபாகரன் வினவினார். கடந்த மாதம் 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்தபோது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்கூட திருவள்ளுவர் இயற்றிய குறள் ஒன்றை உவமையாக கூறியிருந்தார். கல்வி அமைச்சை சேர்ந்தவர்களே இந்த விவகாரத்தில் கீழறுப்பு வேலையில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. எனவே இந்த சம்பவத்திற்கு பொறுப்பானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என பிரபாகரன் கேட்டுக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!