Latestமலேசியா

கண் மருத்துவரின் பெயரை பயன்படுத்தி போலி சுகாதாரப் பொருட்கள் விற்பனை, தம்பதியர் கைது

கோலாலம்பூர், மே 27 – டத்தோ பிரமுகரான கண் மருத்துவ நிபுணரின் புகைப்படத்தை பயன்படுத்தி போலி சுகாதாரப் பொருட்களை விற்பனை செய்த கும்பலுக்கு பின்னணியாக செயல்பட்ட கணவன், மனைவி கைது செய்யப்பட்டனர்.

சிலாங்கூர் ஷா அலாமில் மே 21 மற்றும் 22 ஆம் தேதி நான்கு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் போலி சுகாதார பொருட்களை அறிமுகப்படுத்திய அந்த தம்பதியர் உட்பட நான்கு தனிப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் வர்த்தக குற்றப்புலனாய்வுத்துறையின் இயக்குநர் டத்தோஸ்ரீ ரம்லி முகமது யூசுப் தெரிவித்தார். இரண்டாவது சோதனை நடவடிக்கையில் மூன்று வெளிநாட்டு தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

சம்பந்தப்பட்ட மருத்துவ நிபுணரின் அனுமதியின்றி அவரது புகைப்படத்தை போலி பொருள் விளம்பரத்தில் அந்த தம்பதியர் பயன்படுத்தியுள்ளனர் என ரம்லி முகமது யூசுப் கூறினார். அந்த கும்பல் வெளியிட்ட சுகாதார பொருட்களை அறிமுகப்படுத்துவதற்கு பிரபலமான அந்த மருத்துவ நிபுணரின் புகைப்படத்தையும் அவரது காணொளியையும் பயன்படுத்தியதாக கூறப்பட்டது.

விளம்பரப்படுத்தப்பட்ட அந்த பொருளின் உண்மையை உறுதிப்படுத்துவதற்காக சில தனிப்பட்ட நபர்கள் தொடர்பு கொண்ட பின்னரே இந்த விவகாரம் அந்த மருத்துவ நிபுணருக்கு தெரியவந்தது. அந்த விளம்பரத்திற்கும் அதன் நிறுவனத்திற்கும் தமக்கு எந்தவொரு தொடர்பும் இல்லையென அந்த மருத்துவர் உறுதிப்படுத்தியதாக இன்று Menara KPJ யில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசியபோது ரம்லி முகமது யூசுப் தெரிவித்தார்.

மொத்தம் நான்கு ஆடவர்களும் 30 முதல் 38 வயதுடைய மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து பல்வேறு முத்திரைகளைக் கொண்ட கண் சிகிச்சைக்கான 18 பொருட்கள் ,மடிக்கணினி, விவேக தொலைபேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!