Latestமலேசியா

காஜாஙில் பூனைக்குட்டி உயிரோடு தீ வைக்கப்பட்ட கொடூரம்; தக்க நடவடிக்கை எடுக்க போலீசுக்கு வலியுறுத்து

காஜாங், ஏப்ரல் 24 – சிலாங்கூர், காஜாஙில் மூன்று ஆடவர்கள் சேர்ந்து ஒரு பூனைக்குட்டியை உயிரோடு எரியூட்டியதில் அது கடுமையானத் தீப்புண் காயங்களுக்கு ஆளானது.

Flat Seri Kenari அடுக்குமாடிக் குடியிருப்பின் மோட்டார் சைக்கிள் நிறுத்துமிடத்தில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் அம்மூவரும் மனிதாபிமானமற்ற அச்செயலைப் புரிந்தனர்.

அம்மூவரில் ஒருவன் பூனைக்குட்டிக்குத் தீ வைக்க, மற்ற இருவரும் அவனுக்கு உடந்தையாக அதை இரசித்து வேடிக்கைப் பார்த்ததாக மலேசிய விலங்குகள் நல சங்கத்தின் தலைவர் Arie Dwi Andika தெரிவித்தார்.

அது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டு விட்ட நிலையில், தக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரத் தரப்பை தாங்கள் வலியுறுத்துவதாக Arie Dwi சொன்னார்.

சரியான தண்டனை, தடுப்பு நடவடிக்கை, சரிசெய்தல் ஆகிய மூன்றும் இல்லாததால், விலங்குகள் மீதான இது போன்ற கொடுமைகள் மனிதர்கள் மத்தியில் வேகமாகப் பரவி வருவதை இச்சம்பவம் உணர்த்துவதாக அவர் வேதனையுடன் கூறினார்.

2015 விலங்குகள் நலச் சட்டத்தின் கீழ் போலீஸ் விசாரணை நடத்தி, கொடுமைக்காரர்களுக்கு உரிய தண்டனை வாங்கிக் கொடுக்கலாம் என்றும் அவர் பரிந்துரைத்தார்.

உடல் மோசமாக வெந்துப் போன பூனைக்குட்டியை அங்கிருந்தவர்கள் காப்பாற்றி, தனியார் கால்நடை மருத்துவரிடம் அது சேர்க்கப்பட்டுள்ளது.

இவ்வேளையில் பூனைக்குத் தீ வைத்தவனையும் அவனது 2 சகாக்களையும் போலீஸ் அடையாளம் கண்டிருப்பதாகவும், விரைவிலேயே அவர்கள் கைதாவர் என்றும் காஜாங் போலீஸ் தலைவர் கூறியிருக்கிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!