
கோலாலம்பூர், நவம்பர் 4 – சட்டவிரோத சிகரெட் கடத்தலைக் கண்டுகொள்ளாமல் இருக்கவும், அமலாக்க நடவடிக்கைகளைத் தவிர்க்கவும் காவல் துறை அதிகாரிகளுக்கு சுமார் 10 லட்சம் ரிங்கிட் லஞ்சம் வழங்கியதாகச் சந்தேகிக்கப்படும் மூவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான (MCMC) கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் டத்தோ பட்டம் கொண்ட நிறுவன உரிமையாளர் ஒருவரும், தனியார் வகுப்பாசிரியர் மற்றும் சந்தைப்படுத்தல் அதிகாரி ஆகிய இரு பெண்களும் அடங்குவர். இவர்கள் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் இடைத்தரகர்களாகச் செயல்பட்டு லஞ்சம் வழங்கியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
புத்ராஜெயா, சிலாங்கூர் மற்றும் ஜோகூர் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், சுமார் 6 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள நான்கு சொகுசு வாகனங்கள், கைப்பேசிகள் மற்றும் மடிக்கணினி பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், 20 தனிநபர் வங்கிக் கணக்குகள் மற்றும் ஒன்பது நிறுவன வங்கிக் கணக்குகளில் இருந்த சுமார் 15 லட்சம் ரிங்கிட் முடக்கப்பட்டது.
இவ்வழக்கு மலேசிய ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறது. மூவரையும் நான்கு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



