கிரிக் – ஜெலி கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையில் 31.2 ஆவது கிலோ மீட்டருக்கு அருகே உள்ள பள்ளத்தில் தனது மனைவியை ஜூலை 27ஆம் தேதி தள்ளியதாக நம்பப்படும் ஆடவருக்கு மேலும் ஒரு வாரத்திற்கு தடுப்புக் காவல் நீட்டிக்கப்பட்டது. கொலை முயற்சியில் ஈடுபட்டது தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக அந்த சந்தேகப் பேர்வழிக்கு இன்று முதல் அடுத்த வாரம் திங்கட்கிழமைவரை தடுப்புக் காவலை நீட்டிப்பதற்கு மாஜிஸ்திரேட் சவிந்தர் சிங் ஜூகிந்தர் சிங் ( Savinder Singh Jugindar Singh) அனுமதித்தார். 39 வயதுடைய அந்த ஆடவர் இன்று காலையில் கிரிக் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டார்.
இதற்கு முன் அந்த சந்தேகப் பேர்வழி பாலிங் போலீஸ் தலைமையத்தில் ஆறு நாட்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தபோது மனைவியுடன் தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து அவரது கழுத்தை நெறித்து 10 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் தள்ளி கொல்ல முயன்றதன் தொடர்பில் அந்த வர்த்தகருக்கு எதிராக விசாரணை நடைபெற்று வருகிறது. கீழே தள்ளப்பட்டதால் 32 வயதுடைய அந்த பெண் முதுகெலும்பில் காயத்திற்கு உள்ளானதாக கூறப்பட்டது. தள்ளப்பட்ட இடத்திலேயே விடப்பட்டதால் காயத்தோடு மேலே ஏறி சாலைப் பகுதிக்கு வந்தததைத் தொடர்ந்து பொதுமக்களின் உதவியோடு அவர் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார்.