
கோலாலம்பூர், ஆகஸ்ட்-26,கோலாலம்பூர், ஸ்தாப்பாக்கில் அண்மையில் 14 வயது பள்ளி மாணவி மரணமடைந்தது தொடர்பான விசாரணையில், அவரது மூத்த சகோதரியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகிக்கப்படும் 51 வயது நபர் ஒருவரை போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமிகளின் தாயாரின் ஆண் நண்பரான அந்த சந்தேக நபர், ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ Fadil Marsus உறுதிப்படுத்தினார்.
பாதிக்கப்பட்ட 15 வயதுடைய மூத்த சகோதரி அளித்த தகவல்கள் அடிப்படையில், 2017-ஆம் ஆண்டு சிறார் பாலியல் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் போலீஸார் விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளனர்.
முன்னதாக, ஆகஸ்ட் 18-ஆம் தேதி ஜாலான் லங்காவியிலுள்ள தனது வீட்டில் இருந்து அதிகாலை நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட 14 வயது மாணவி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மரணப் பின்னணியில் ஏதேனும் துன்புறுத்தல்கள் இருந்ததா என்பது குறித்தும் போலீஸார் விசாரித்து வரும் நிலையில், இதுவரை 90-க்கும் மேற்பட்டவர்களிடம் வாக்குமூலங்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.



