
மலாக்கா, ஆகஸ்ட்-26- மலாக்கா, Ayer Kerohவில் உள்ள பிரபலமான பொழுதுபோக்கு பூங்காவொன்றில் நீர் சறுக்கு விளையாட்டின் போது எதிர்பாராதவிதமாகத் தூக்கியெறியப்பட்ட இரு பெண்களுக்குத் தலையில் காயம் ஏற்பட்டது.
கடந்த சனிக்கிழமை தங்கள் குடும்பத்தினருடன் அப்பொழுதுபோக்கு பூங்காவிற்குச் சென்றிருந்த அப்பெண்கள் காற்றடைக்கப்பட்ட மிதவைக் குழாயைப் பயன்படுத்தி நீரில் சறுக்கிக் கொண்டு செல்லும் போது அவ்விபத்து நிகழ்ந்தது. ஏதோ ஒன்றின் மீது மோதி அவர்கள் தூக்கி எறியப்பட்டது ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக மலாக்கா தெங்கா மாவட்டக் காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் Halim Abas தெரிவித்தார்.
அவ்விருவரில் 46 வயது பெண்ணுக்கு தாடைக்குக் கீழே காயம், தலை, மார்பு வலி மற்றும் வலது முழங்காலில் காயம் ஏற்பட்டது. மலாக்கா மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்று அவரைப் பரிசோதித்ததில் அவரின் தலையின் வலது பக்கத்தில் ஒரு சிறிய இரத்தக்கட்டு இருப்பது கண்டறியப்பட்டது.
31 வயதான மற்றொரு பெண், சறுக்குப் பாதையில் கீழே இறங்கும் போது சுயநினைவை இழந்தார். தனியார் மருத்துவமனையொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு மூளை அதிர்ச்சி ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது.
அச்சம்பவத்தைக் கவனித்த 46 வயது பெண்ணின் 22 வயது மகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவ்விபத்தில் எந்தக் குற்றச் செயலும் கண்டறியப்படவில்லை என Halim Abas மேலும் கூறினார்.



