Latestஉலகம்

குஜராத் கேளிக்கைப் பூங்காவில் பெரும் தீ ; 9 சிறார்கள் உட்பட 27 பேர் பலி

குஜராத், மே-26 – இந்தியாவின் குஜராத்தில் கேளிக்கை விளையாட்டுப் பூங்காவில் சனிக்கிழமை ஏற்பட்ட பெரும் தீயில் 9 சிறார்கள் உட்பட 27 பேர் பலியாயினர்.

மேலும் அறுவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் மரண எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மரணமடைந்தவர்கள் பெரும்பாலும் உடல் கருகி மாண்டதால் அவர்களை அடையாளம் காண்பதில் போலீஸ் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளது.

கோடை கால விடுமுறையின் வார இறுதி என்பதால், சம்பவத்தின் போது அந்த 2 மாடி கேளிக்கை மையத்தில்  சுமார் 300 பேர் குழுமியிருந்தனர்.

தீயின் போது பலத்த காற்று வீசியதில், தற்காலிகக் கட்டமைப்பு தூண்கள் வாசல் பக்கமாக சரிந்ததால் பலர் வெளியே வர முடியாமல் உள்ளேயே சிக்கிக் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

தீக்கான காரணத்தைக் கண்டறிய தீயணைப்புத் துறையுடன் ஒத்துழைத்து வருவதாக போலீஸ் கூறியது.

தீ விபத்து தொடர்பில் கேளிக்கைப் பூங்கா உரிமையாளர் உள்ளிட்ட மூவர் விசாரணைக்காகக் கைதாகியுள்ளனர்.

தீ விபத்து ஏற்பட்ட பகுதியைச் சேர்ந்த சட்டமன்றத் உறுப்பினர், அம்மாவட்ட வரலாற்றில் மோசமான விபத்தாக அதை வருணித்தார்.

தற்போதைக்கு மீட்பு நடவடிக்கைகளுக்கே முன்னுரிமை எனக் கூறிய அவர், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றார்.

தீ ஏற்படும் அளவுக்கு அலட்சியமாக இருந்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவர் என்றார் அவர்.

அச்சம்பவம் குறித்து கடும் அதிர்ச்சியும் கவலையும் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபமும் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!